பயிர்களைத் தாக்கும் முக்கியமான இரண்டு நோய்களும் அதனைத் தடுக்கும் முறைகளும் இதோ...
1.. வேரழுகல் நோய்...
பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, சோளம், மக்காச்சோளம் என 400க்கும் மேற்பட்ட பயிர்கள் வேரழுகல் நோயால் தாக்கப்படுகின்றன. பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது.
இப்பூஞ்சாணம் அதிக வெப்ப நிலையில் தாக்கும் தன்மையை கொண்டது. மானாவாரிப் பயிர்கள் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் நோய்த் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோய்க்கிருமி மண் மற்றும் நீர் மூலம் பரவுகிறது.
இந்நோயால் 50 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள்
இலைகள் வாடி, பின் செடிகளும் காயத் தொடங்கும். நோய் தாக்கிய செடியை மெதுவாக இழுத்தால் கூட கையோடு வந்து விடும். செடியின் தண்டுப்பாகத்தில் தரை மட்டத்தை ஒட்டி கருப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்.
புள்ளிகள் இணைந்து தண்டு மற்றும் வேர் பாகங்கள் நிறமாற்ற மாகிவிடும். வேர்ப்பகுதியில் பட்டைகள் உரிந்து சல்லி வேர்கள் சிதைந்து மக்கிவிடும். செடியின் வேர் மற்றும் தண்டுப்பகுதியில் கருமை நிற கடுகு வடிவில் பூசண வித்துக்கள் காணப்படும்.
நோய் நிர்வாகம்:
வயலில் விட்டுப்போன நோய் தாக்கிய செடிகளை அகற்றி எரிக்க வேண்டும். நெல், கரும்பு போன்றவற்றைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யலாம். ‘டிரைக்கோடெர்மா விரிடி’ நான்கு கிராம் அல்லது ‘சூடோமோனாஸ் புளுரோசன்ஸ்’ பத்து கிராம் அல்லது ‘கார்பன்டாசிம்’ இரண்டு கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
‘கார்பன்டாசிம்’ ஒரு கிராம் மருந்து அல்லது ‘தையோ பினையிட் மீதை’ ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியின் வேரை சுற்றி ஊற்ற வேண்டும். நிலத்தில் ஈரம் உலர்ந்து விடாமல் அடிக்கடி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
2.. வாடல் நோய்...
நோயின் ஆரம்ப நிலையில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர ஆரம்பிக்கும். தாக்குதலால் மெதுவாக நோயின் தீவிரம் அதிகமாகும்போது பாதிக்கப்பட்ட செடியானது வாட ஆரம்பிக்கும். அச்செடியின் வேர்கள் மற்றும் தண்டுப்பகுதியில் கருமை நிறக்கோடுகள் உருவாகி முழுவதும் கருப்பு நிறமாகி விடும்.
நோய் நிர்வாகம்:
விதை நேர்த்தி ‘டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
பசுந்தாழ் உரம் அல்லது தொழுஉரம் மண்ணில் இடுவதால் இந்நோயின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ‘டைபென்கோனசால்’ ஒரு மில்லி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியின் வேரை சுற்றி ஊற்ற வேண்டும்.