கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பதில் இருக்கும் முக்கிய செயல்கள் இதோ...
கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பதில் இருக்கும் முக்கிய செயல்கள்
1.. வெப்பநிலை
2.. ஈரப்பதம்
3.. காற்றோட்டம்
வெப்பநிலை
முட்டைகளை அடைகாக்கும்போது வெப்பநிலை ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் முட்டையினுள் வளரும் கருவானது சிறிய வெப்பநிலை மாற்றங்களை மட்டுமே தாங்கிக்கொள்ளும். உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் சென்றால் மட்டுமே முட்டையினுள் இருக்கும் கருவானது வளர்ச்சியடையத் தொடங்கும்.
உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியம் எனப்படுவது, இந்த வெப்பநிலைக்குக் கீழ் கருவின் வளர்ச்சி நிறுத்தப்பட்டும், இதற்கு மேல் கருவின் வளர்ச்சி ஆரம்பிக்கப்படும் என்பதாகும். கோழி முட்டைகளின் உடற்செயலியல் பூச்சிய வெப்பநிலை என்பது 75 டிகிரி பாரன்ஹீட்டாகும் (24 oC).
அடைகாப்பானில் கோழி முட்டைகள் அடைகாக்கும் காலத்தில் முதல் 18 நாட்கள் வெப்பநிலை 99.50 to 99.75 o Fஆகவும், குஞ்சு பொரிப்பானில் அடைகாக்கும் கடைசி மூன்று நாட்கள் இருக்க வேண்டிய வெப்பநிலை 98.5 o Fஆகும்.
ஈரப்பதம்
அடைகாக்கப்படும் போது முட்டைகளிலிருந்து வெளியேறும் ஈரப்பதத்தைப் பொருத்து அடைகாப்பானில் ஈரப்பதத்தின் அளவு பராமரிக்கப்படும். பொதுவாக அடை காப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் ஈரக்குழிழ் மற்றும் உலர்ந்த குமிழ் வெப்பநிலைமானிகளின் அளவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து ஈரப்பதம் அளவிடப்படுகிறது.
அடைகாக்கும் காலத்தின் முதல் 18 நாட்களுக்கு 55-60% ஈரப்பதமும், கடைசி மூன்று நாளில் 65-75% ஈரப்பதமும் இருக்கவேண்டும். அதிகப்படியான ஈரப்பதம் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்தால், கோழிக்குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறி அவற்றின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
காற்றோட்டம்
முட்டை அடைகாப்பான்களிலும், குஞ்சு பொரிப்பான்களிலும் காற்றோட்டம் நன்றாக இருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் வளரும் கருவின் முதல் நாள் வயதிலிருந்து அவை குஞ்சுகளாக வளர்ச்சியடையும் வரை போதுமான அளவு தூய ஆக்சிஜன் அதிகமுள்ள காற்று மிகவும் அவசியமாகும்.
கருவின் முதல் வளர்ச்சி காலத்தை விட கடைசி வளர்ச்சி காலத்தில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் ஆக்சிஜனின் அளவு 21%. பொதுவாக அடைகாப்பானில் உள்ள காற்றிலுள்ள ஆக்சிஜனின் அளவு 21%. இதில் ஒவ்வொரு 1% ஆக்சிஜன் குறைந்தாலும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனில் 5% குறையும்.
கரு வளர்ச்சியடையும் போது நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடும் ஒன்றாகும். முட்டையினுள் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு முட்டை ஓட்டின் வழியாக வெளியே வருகிறது.
நான்கு நாட்களுக்கு அடைகாப்பானில் வளரும் கரு தாக்குப்பிடிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 0.3% ஆகும். 0.5%க்கும் மேல் கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும். மேலும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 5%க்கும் மேல் இருந்தால் வளரும் கரு முற்றிலும் இறந்து விடும்.