நெற்பயிர் சாகுபடியின்போது மேற்கொள்ள வேண்டிய பாசனமுறைகள் பற்றி இங்கே காணலாம்...
பாசனமுறை
ஒவ்வொரு வயலிலும் தண்ணீர் நுழையும் இடத்தில் இரண்டடி நீள, அகல, ஆழ குழி அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு மக்கும் வேம்பு, எருக்கு, ஊமத்தை, தங்கரளி, நெய்வேலிக் காட்டாமணக்கு போன்றவற்றின் இலைகளைக் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன்மேல் கல் அடுக்கி வைத்து நீர் பாய்ச்சி வர வேண்டும். இந்தக் கசாயம் நீரில் சீராகப் பரவி வளர்ச்சிக்கு உதவும். நூற்புழுவைக் கட்டுப்படுத்தும். நூற்புழுவுக்கு எதிரான நுண்ணுயிர்கள் இதில் வாழ வாய்ப்புக் கிடைக்கும். நெற்பயிரின் தூரில் தங்கி சேதப்படுத்தும் புகையான் தாக்குதலையும் கட்டுப்படுத்தும்.
நெற்பயிரின் சீரான வளர்ச்சி மற்றும் தூர்க் கட்டும் திறன் அதிகரிக்க வாளிப்பான நெற்குலைகள் உருவாக, திரட்சியான நெல் மணிகள் உருவாக கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம். சாண எரிவாயுக் கலனில் வெளிவரும் சாணக்கரைசல் 75 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நீர் 75 லிட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எரிகலன் இல்லாதவர்கள் 50 கிலோ சாணியை 100 லிட்டர் நீருடன் கலந்து சாணக் கரைசல் தயார் செய்து கொள்ள வேண்டும். இத்துடன் முன்னர் சொன்ன வளர்ச்சி ஊக்கிகளில் தெளிப்பதற்கு தேவையான ஒன்றைக் கலந்து 3 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.