தென்னை மரங்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ...
தென்னை மரங்களைத் தாக்கும் பூச்சிகளில் சிவப்பு கூண்வண்டு மற்றும் காண்டாமிருகவண்டு ஆகியவை தென்னை மரங்களின் மகசூலில் கணிசமான இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதில், சிவப்பு கூண்வண்டால் தாக்கப்பட்ட தென்னை மரங்களில் தண்டு மற்றும் அடிப்பாகத்தில் துளைகள் காணப்படும். துளைகள் மூலம் வண்டுகள் தின்று வெளியேற்றிய நார்க்கழிவுகள் காணப்படும்.
துளைகளிருந்து செம்பழுப்புநிற திரவம் வடிந்து கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட மரத்தை தட்டினால் பொத்,பொத் என்ற ஓசை கேட்கும். மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், தென்னை மரங்களை சிவப்பு கூண்வண்டுகள் தாக்கியுள்ளதாக அறிந்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
முதலாவதாக தென்னந்தோப்புகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மரங்களின் நுனிப்பகுதியை தேவையான இடைவெளியில் தூய்மைப்படுத்த வேண்டும். பச்சை மட்டைகள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இதைத்தவிர பெர்ரோ லூர் எனப்படும் இனக்கவர்ச்சி பொறிகளை ஓர் ஏக்கருக்கு இரண்டு வீதம் தென்னந்தோப்புகளில் வைத்து சிவப்பு கூண்வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
விவசாயிகளுக்கு தேவையான இனக்கவர்ச்சி பொறிகள் வேளாண்மைத் துறை மூலம் 50% மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொன்னமராவதி வட்டார விவசாயிகள் இதை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.