நோனி மரங்கள் பற்றி நீங்கள் சற்றும் கேள்விப்படாத தகவல்கள் இதோ...
நோனி மரங்கள்
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் நோனியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அதைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இத்தனைக்கும், நோனியின் தாயகம் இந்தியாதான்.
ஊர்கள்தோறும் உள்ள மஞ்சனத்தி மரத்தின் (நுனா) குடும்பத்தைச் சேர்ந்ததுதான் நோனி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நோனி, வெளிநாட்டுக்காரர்கள் கண்ணில் பட்டவுடன்தான் வெளி உலகுக்கு அறிமுகமானது.
அங்கு நோனியை ‘தெய்வீக மரம்’ என்று கொண்டாடுகிறார்கள். பொதுவாக, சுரப்பிகளின் கோளாறுதான் நோய்களுக்கு மூலக்காரணம். அதை சரி செய்யும் பணியை நோனி செய்வதால், வந்த நோய் தீர்கிறது.
வரும் நோய் தடுக்கப்படுகிறது. இதனால், சகல நோய்களுக்கும் இதைத் தீர்வாகப் பயன்படுத்துகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நோனியைப்பற்றி கேள்விப்பட்டேன். அதன் பிறகு, பல இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தேன். அந்தமான் பகுதியில் நிறைய நோனி மரங்கள் உள்ளன.
அதில் இருந்து ‘மொரின்டா சிட்டி போலியா’ என்ற ரகத்தைத் தேர்வு செய்து, எனது நிலத்தில் 50 செடிகளை நடவு செய்தேன். அந்த மரங்கள் இப்போது, காய்த்துக் குலுங்குகின்றன. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்தைத் தவிர்த்து, மற்ற நிலங்களில் அருமையாக வளரும். அதுவும் உப்புநீரில் மிகச் சிறப்பாக வளர்கிறது.
ஆரம்பத்தில் நோனி விதைகளை முளைக்க வைப்பது பெரிய சவாலாக இருந்தது. அதன் பிறகு, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் அல்லது இ.எம் கலவையில் நோனி விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து விதைத்தபோது, முப்பதே நாட்களில் முளைத்து விட்டன.
நடவு செய்த 18-ம் மாதத்தில் இருந்து, இது காய்ப்புக்கு வரும். மூன்று ஆண்டு வயது கொண்ட மரத்தில், 50 கிலோ முதல் 100 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். இதில் இருந்து, சுமார் 10 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம்.
தற்போது, சந்தையில் 500 மில்லி நோனி ஜூஸ் 1,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இத்தனைக்கும், அந்த ஜூஸ் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
நேரடியாக பழத்தில் இருந்து எடுக்கப்படும் ஜூஸில்தான் சுவையும், தரமும் அதிகம். தமிழ்நாட்டில் வீடுகள்தோறும், நோனி மரங்கள் இருந்தால், மருத்துவச் செலவே அந்த குடும்பத்துக்கு வராது.
தற்சமயம் நானும் சில நண்பர்களும் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே, நோனி வளர்த்து வருகிறோம். ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்தால்தான், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
அற்புதமான இந்த நோனி மரங்கள் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ளன. அவற்றை முறையாக ஆராய்ச்சி செய்து, நிறைய கன்றுகளை உற்பத்தி செய்து வெளியிட்டால், நோனி சாகுபடி வரும் காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்களில் முதலிடத்தைப் பிடிக்கும்.”