பழமரச் சாகுபடியாளர்களுக்கு ஏன் கோடை உழவு ஏற்றது?
“கோடை உழவால் கோடி நன்மை”, “சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம்” என்றெல்லாம் பழமொழிகள் கோடை உழவின் நன்மைகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன.
கோடை மழையை அடுத்து பழமரத் தோப்புகளில் இடை உழவு மேற்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
கோடை உழவின் நன்மைகள்:
அ. மழை நீர் சேமிப்பு:
பெய்யும் மழை நீரை வழிந்தோடி வீணாகி விடாமல் தடுத்து மண்ணுக்குள் இறக்கி மழை நீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது. இதற்கேற்ப நாம் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும்.
ஆ. மண் தன்மை மேம்பாடு:
மண் நன்கு பொலபொலப்பாகி, மண்ணின் தன்மை மேம்படுகிறது.
இ. களைக் கட்டுப்பாடு:
இடை உழவின் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் வரும் பருவத்தில் களைகள் பூத்து விதைகள் பரவுமுன் அழிக்கப்படுவதால் களைகளின் தாக்கம் வெகுவாக குறையும். மேலும் பல்வேறு பூச்சிகள், நோய் கிருமிகளுக்கு களைகளை மாற்று உணவுப் பயிராக விளங்குவதால் பூச்சிநோய் தாக்குதலும் வெகுவாக குறையும்.
ஈ. பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்பாடு:
மண்ணில் மறைந்துள்ள கூட்டுப்புழுக்கள், கிருமிகள் இடை உழவால் வெளிப்படுத்தப்பட்டு வெயிலின் வெம்மையால் அழிக்கப்படுவதால் வரும் பருவத்தில் பூச்சி நோய் தாக்குதல் வெகுவாக குறையும். எனவே, பழமரச் சாகுபடியாளர்கள் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி பழமர தோப்புகளில் இடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம்.