விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்…

government benefits-to-farmers


 

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்கவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வரும் வேளையில் விவசாயத்தின் அவசியம் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சீரிய திட்டங்களை உருவாக்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

"அட்மா' திட்டம்: அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பூந்தமல்லி வேளாண் உதவி இயக்குநர் டி.என்.உமாதேவி தினமணி செய்தியாளரிடம் கூறியது: "பூந்தமல்லி வட்டத்தில் ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
இதில் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நெல் தவிர காய்கறிப் பயிர்கள், மலர்கள், சிறிய அளவில் பயறு, நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளின் நிலத்திலும் மண் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து "ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு' வழங்கப்பட்டு வருகிறது.
அரசு வழங்கும் மானியத் திட்டங்களை விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios