Asianet News TamilAsianet News Tamil

பண்ணைகளுக்கு ஏற்ற வெள்ளாட்டு இனங்கள்; வளர்த்து நல்ல லாபம் பாருங்க…

Goat species suitable for farms Grow and see good profit ...
Goat species suitable for farms Grow and see good profit ...
Author
First Published Jul 26, 2017, 12:30 PM IST


தமிழக வெள்ளாட்டு இனங்கள்

தமிழ்நாட்டில் கன்னி ஆடு, கொடி ஆடு, பள்ள ஆடுகள், சேலம் கருப்பு, திருச்சி கருப்பு என பல ஆடுகள் உள்ளன. இவற்றில் கன்னி ஆடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவை. இந்த இன ஆடுகள் பொதுவாக கருப்பு நிறத்தில் காணப்படும். முகத்தில் இரண்டு வெள்ளை கோடுகளுடன் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து வால் வரை வெள்ளை நிறத்தில் காணப்படும்.

இந்த வகை ஆடுகளை 'பால்கன்னி' என்றும் சொல்வதுண்டு. வெள்ளைக்கு பதிலாக சிவப்பு நிறம் இருந்தால் செங்கன்னி என்று சொல்வதுண்டு. இந்த இன நாட்டு ஆடுகள் சராசரியாக 2 முதல் 3 குட்டிகள் போடும் திறன் கொண்டவை. கிடா ஆடுகள் 60 முதல் 70 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடையும் பெறும் தன்மை கொண்டவை. இந்த இன ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

சமுனாபாரி

இந்த இன ஆடுகள் உத்திரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்தது. நல்ல உயரமும், மிக நீளமான காதுகளும் கொண்டவை. கிடா ஆடுகள் 65 முதல் 80 கிலோ எடை வரை வளரும். பெட்டை ஆடுகள் 45 முதல் 60 கிலோ வரை எடை இருக்கும். தினமும் இரண்டரை லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்டது.

பார்பாரி

டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த வகை ஆடுகள் காணப்படுகின்றன. உடலில் வெள்ளை மற்றும் பழுப்பு நிறங்களில் புள்ளிகள் கொண்டவை. ஒரு ஈற்றிற்கு இரண்டு முதல் மூன்று குட்டிகள் போடும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையும் உடையவை.

தலைச்சேரி

இவைகள் மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. வெள்ளை, பழுப்பு, கருப்பு நிறங்களில் காணப்படுகின்றன. இரண்டு முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும் திறன் கொண்டது. கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடை வரை கொண்டவை. நன்றாக பால் கொடுக்க கூடியவை.

ஆடுகளை தேர்வு செய்யும் முறை

வெள்ளாட்டு பண்ணையில் பெட்டை மற்றும் கிடாக்களை அவற்றின் பாரம்பரிய இனத்தை பார்த்து தேர்வு செய்ய வேண்டு.

பெட்டை ஆடுகள் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும் திறன் பெற்று இருக்க வேண்டும். கிடாக்கள் தோற்றத்தில் உயரமாகவும், நெஞ்சு பாகம் அகன்றதாகவும்ட, உடல் பாகம் நீண்டதாகவும் இருக்குமாறு உள்ள ஆடுகளை தேர்வு செய்தல் வேண்டும்.

பெட்டை ஆடுகள் 6 முதல் 9 மாதங்களில் பருவமடையும் தன்மை பெற்று இருக்க வேண்டும்.

கிடாக்கள் 9 முதல் 12 மாதங்களில் பருவமடையும் திறன் பெற்று இருப்பது நல்லது. அதிக எடை உள்ள கிடாக்குட்டிகளை 6 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். நல்ல தரமான பெட்டை குட்டிகளை 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும்.

இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யும் கிடாக்களை 2 முதல் 3 குட்டிகள் ஈனும் பெட்டை ஆட்டில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.

இது போன்ற அம்சங்களை கணக்கில் எடுத்து கிடாக்களையும், பெட்டைகளையும் தேர்வு செய்தால் மிகவும் ஆரோக்கியமான ஆடுகளை கொண்ட பண்ணையை அமைக்க முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios