ஆடு வளர்ப்பு: பிரச்சனைகளும் தீர்வுகளும்…
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் முதல் பெரும் விவசாயிகள் வரை ஆடு வளர்ப்பை ஒரு முக்கியத் தொழிலாக அல்லது உப தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடு வளர்ப்புத் தொழிலில் உள்ள பிரச்னைகளும், அதற்கானத் தீர்வுகளும் விவசாயிகள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
தற்போதைய நிலையில் விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்களின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதால், ஆடுகளுக்கு மேய்ச்சல் மூலம் கிடைக்கக்கூடிய தீவனம் குறைந்து, பராமரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மழையளவு குறைந்து, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் நலிவுற்று வருவதால், கிராமப்புற மக்கள் வேலை தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கூலியாள்கள் கிடைக்காமல் ஆடு வளர்ப்புத் தொழில் செய்யத் தடை நிலவுகிறது.
மேலும், திடீரென தாக்கும் நோய்களால் ஆடுகள் பாதிக்கப்பட்டு இறப்பதாலும் ஆடு வளர்ப்புத் தொழில் நலிவடைந்து வருகிறது. இடத்துக்கு ஏற்ப சரியான இனத்தைத் தேர்வு செய்யாததும் ஆடு வளர்ப்புத் தொழில் நலிவடைய முக்கியக் காரணமாகும்.
அந்தவகையில், எந்தவித தொழில்நுட்ப ஆலோசனைகளும் பெறாமல் விவசாயிகள் தன்னிச்சையாக ஏதேனும் ஓர் இனத்தை வாங்கி கலப்பினம் செய்து பிரச்னைக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு தீர்வு காண விவசாயிகள் முதலில் தரிசு, உபரி நிலங்களை முறையாகச் சீர்படுத்தி, முழுவதும் பயன்படும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அவற்றில், ஆடுகளுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த புல், பயறு வகைத் தீவனங்கள், தீவன இலைகளைக் கொடுக்கக் கூடிய மரங்களைப் பயிரிடவும் வேண்டும். தவிர, பழ மரங்கள், தென்னை சாகுபடி செய்துள்ளவர்கள் மரங்களுக்கு இடையே கொழுக்கட்டைப் புல் கோ-3, கோஎப்எஸ்-29 சோளம், கினியாபுல், முயல் மசால், வேலி மசால், கொள்ளு ஆகியவற்றை பயிர் செய்து ஆடுகளுக்கு வேண்டிய தீவனப் பயிர்களை உருவாக்க வேண்டும்.
தீவனப் பயிர்கள் அதிகமாக விளையும் தருணங்களில் பயிர் செய்து பதப்படுத்தி, அதை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். மேலும், ஆள்கள் பற்றாக்குறையைப் போக்க பகுதிநேரக் கொட்டகை முறையில் ஆடுகளை வளர்க்கலாம்.
தட்பவெப்பநிலை மாற்றம், தீவன மேலாண்மை மாற்றம், சந்தையில் புதிதாக வாங்கிய ஆடுகளை உடனடியாக மந்தையில் சேர்ப்பது, தொற்று நோய் கண்ட ஆடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது மற்ற ஆடுகளுடன் சேர்வது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
புதிதாக வாங்கிய ஆடுகளை 30 முதல் 45 நாள்களுக்குத் தனித்து வைத்திருந்தே மந்தையில் சேர்க்க வேண்டும். முக்கிய நோய்களுக்கு உண்டான தடுப்பூசிகளை உரிய காலங்களில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் போட வேண்டும்.
குட்டிகளைத் தாக்கக் கூடிய ரத்தக் கழிச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களுக்குத் தடுப்பு, சரியானப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவதால் குட்டிகளின் இறப்பைத் தடுக்கலாம்.
ஆடு வளர்ப்போர், இதர கால்நடைகள் வளர்ப்போர் தக்க அறிவுரைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமான கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண் அறிவியல் நிலையங்கள், விவசாயப் பயிற்சி மையங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலுள்ள தொழில்நுட்ப நிபுணர்களை அணுகி தகுந்த ஆலோசனைகள் பெறலாம்.