முந்திரியில் கவாத்து மூலம் 40 சதவிதம் அதிக விளைச்சலைப் பெறலாம்...
முந்திரி பொதுவாக 7*7 மீட்டர் இடைவெளியில் ஏக்கருக்கு 80 கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.
புதிய தொழில்நுட்பமான அடர் நடவு முறையில் 5*4 மீட்டர் இடைவெளியில் 200 கன்றுகள் நடலாம்.
இவ்விரு முறைகளிலும் கிளைகளை கவாத்து செய்தல் முக்கியம்.
நோய்வாய்ப்பட்ட கிளைகள், குறுக்கும் நெடுக்குமான கிளைகள் நீர் போத்துக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
கவாத்து:
ஆகஸ்ட் மாதம் வரும் பூந்தளிர்களில் இருந்து டிசம்பர் மாதம் பூக்கள் மலரும். முந்திரி காய்ப்பு முடிந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மூன்றாமடுக்கு கிளைகளை கவாத்து செய்துவிட வேண்டும்.
வெட்டுப்பட்ட காயங்களில் போர்டோ பசை அல்லது பைட்டலான் மருந்தைச் சுண்ணாம்பு பதத்தில் பூசிவிட வேண்டும்.
உரமிடுதல்:
ஒரு மரத்திற்கு 1000:125:250 கிராம் தழை, மணி, சாம்பல் சத்து கலவையை 5 மற்றும் அதற்கு மேல் வயதுடைய மரங்களுக்கு மழை நாட்களில் அடியுரமாக கொடுக்க வேண்டும். சிறிய மரங்களுக்கு வயதுக்கு தகுந்தபடி உர அளவைக் குறைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஒரு வயது உரப்பரிந்துரையில் 5ல் ஒரு பகுதி 2 வயது, 5ல் 2 பகுதி என்பதுபோல் கணக்கிடவேண்டும்.
கவாத்து செய்து 30 அல்லது 45 நாட்களுக்குள் புதிய இலைகளும் புதுத் தளிர்களும் நன்கு வளர்ந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு மேலுரத் தெளிப்பு கொடுக்க வேண்டும். தழை, மணி, சாம்பல்சத்து 19:19:19 கலவையை (1 சதம்) மேலுரமாக தெளிக்க வேண்டும்.
இரண்டாம் மேலுரத் தெளிப்பு:
பெரும்பாலான ரகங்களும் விதைக்கன்றுகளும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பூக்க தொடங்கும் வி.ஆர்.ஐ.3ரகம் டிசம்பர் முதல் வாரத்திலேயே பூக்கத் தொடங்கிவிடும்.
வீரிய ஒட்டு ரகமான வி.ஆர்.ஐ. (முந்திரி) எச்.1, டிசம்பர் கடைசி வாரம் பூக்கத் தொடங்கும். பூங்கொத்துக்கள் தோன்றியவுடன் இரண்டாம் தெளிப்பாக மோனோ அம்மோனியம் பாஸ்பேட் ஒரு சத மேலுரக் கலவையை போரான் நுண்ணூட்டச் சத்துடன் (0.1%) கலந்து தெளிக்க வேண்டும்.
இந்த பருவத்தில் தேயிலைக்கொசு, இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படலாம். அவ்வாறு இருந்தால் புரோபனோபாஸ் மருந்தை 0.1 சதம் கலந்து தெளிக்கலாம்.
மூன்றாம் மேலுரத் தெளிப்பு:
முந்திரியில் மண், மரத்திலுள்ள சத்துக்களைப் பொறுத்தே பூ, காய் பிடிப்புத்திறன் வேறுபடுகிறது. முந்திரி ஒரு மானாவாரிப்பயிராக இருப்பினும் அனைத்துவகை மண்ணிலும் வளரக்கூடிய பயிராக இருப்பினும் சரியான நீர்ப்பாசனமும் உர நிர்வாகமும் செய்யப்பட்ட தோப்பில் அதிகமான விளைச்சலைத் தரக்கூடியது.
எனவே காய்பிடிப்பு தொடங்கியவுடன் பஞ்சகாவியம் கரைசலை (3 சதம்) மேலுரமாகத் தெளிப்பது நல்லது. இது ஒரு பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
இவ்வாறு முந்திரி மரங்களை நட்ட 6 மாதம் முதலே கவாத்து முறைகளைச் சரியாகக் கையாள்வதால் புதிய பூக்கும் கிளைகளை உந்தமுடியும்.
மேலுரத் தெளிப்பான் மருந்துகளைத் தெளிப்பதன் மூலம் பூக்கும் திறன், காய்பிடிப்புத்திறன், முந்திரிக்கொட்டை வளர்ச்சி, விளைச்சல், பருப்பின் தரம் ஆகியவற்றை அதிகரிக்கலாம்.
இந்த கவாத்து, மேலுரத் தெளிப்பு தொழில்நுட்பத்தின்மூலம் 30 முதல் 40 சதம் அதிக விளைச்சலைப் பெறலாம். ஏக்கருக்கு 11,000 ரூபாய் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.