கேழ்வரகு சாகுபடி செய்து மண் வளம், லாபம் ரெண்டும் பெறலாம். எப்படி?
குறுதானிய பயிர்களில் முக்கியமானது கேழ்வரகு. தமிழகத்தில் கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் உடலுக்கு தேவையான புரதம், மாவுச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.
இத்துடன் கேழ்வரகில் மிக அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. இது உடல்பருமன், இதயநோய், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
இந்த கேழ்வரகு சாகுபடி செய்யும் முறை
நிலம்:
எல்லா வகை மண்களிலும் பயிர் செய்யலாம். எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது.
பருவம் மற்றும் ரகம்:
மாசிப்பட்டமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் 90 முதல் 95 நாட்கள் வயதுடைய கோ.11 ரகத்தையும், 95 முதல் 100 நாட்கள் வயதுடைய கே.5 மற்றும் கே.7 ஆகிய ரகங்களையும் நடலாம்.
புரட்டாசி பட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 90 முதல் 95 நாட்கள் வயதுடைய கோ.11 கோ.7 மற்றும் கே.7 ஆகிய ரகங்களையும், 100 நாட்கள் வயதுடைய கோ.7 மற்றும் 95 முதல் 100 நாட்கள் வயதுடைய கோ.7 ரகத்தையும் பயிர் செய்யலாம்.
விதையளவு:
எக்டருக்கு 5 கிலோ போதுமானது.
இடைவெளி:
பயிர் இடைவெளியாது 45 க்கு 15 செமீட்டர் என்ற அளவில் இருத்தல் நல்லது.
விதை கடினப்படுத்துதல்:
நுண்ணுயிர் நேர்த்தி செய்வதற்கு ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா 25 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும்.
நுண்ணூட்டம் இடுதல்:
எக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட சத்து இட வேண்டும்.
களை நிர்வாகம்:
நிலத்தில் ஈரம் இருக்கும் போது விதைத்த 3 வது நாள் ஒரு எக்டருக்கு அட்ரசின் களைக்கொல்லி 500 கிராம் என்ற அளவில் 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
ஊடுபயிராக பயறு வகைப்பயிர்கள் பயிறு செய்திருந்தால் அட்ரசின் பயன்படுத்தக்கூடாது.
உரநிர்வாகம்:
மானாவாரி பயிருக்கு 40-20-0 என்ற அளவில் தழை,மணி, சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இறவையில் 60-30-30 தழைச்சத்தில் பாதியும், மணிச்சத்து முழுஅளவிலும், மற்றும் சாம்பல் சத்து அடியுரமாக இட்டு பின்பு மீதியுள்ள தழைச்சத்தை பிரித்து மேலுரமாக இரண்டு தடவையாக நட்ட 15 வது மற்றும் 30 ம் நாள் இடவேண்டும்.
நீர்ப்பாசனம்:
விதைத்தவுடன் 4 வது நாளும் பின்னர் 7 லிருந்து 10 நாட்களுக்குள் ஒரு முறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
களை எடுத்தல்:
விதைத்த 15 மற்றும் 30 வது நாட்களில் களை எடுக்கவும்.
பயிர்பாதுகாப்பு:
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண் துறை ஆலோசனையின் படி பாதுகாப்பு மருந்துகள் பயன்படுத்தவும்.
சுழற்சி முறை
கேழ்வரகை பச்சைப்பயறு, உளுந்து, துவரை அல்லது கடலை போன்ற ஏதேனும் ஒரு பயிருடன் பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதால் நிலையான அதிக விளைச்சல் பெறலாம். அத்துடன் தழைச்சத்து தரக்கூடிய உரத் தேவையும் குறைகிறது.
மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக விளைச்சலையும் பெற வேண்டுமெனில் கேழ்வரகு பயறு வகைப்பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்கலாம்.