விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் மாவட்டம் தோறும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன.
விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சேமித்து வைக்கவும், நியாய விலைக்கு விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் கிளை விற்பனை கூடங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக உதவுகின்றன.
விவசாயிகள் கவனம்:
விவசாயிகள் தங்களின் விளை பொருளை சுத்தப்படுத்தி, காயவைத்து நல்ல சாக்குகளில் விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வர வேண்டும்.
விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும் விளை பொருளை கொண்டு வரலாம். அலுவலக வேலை நாட்களில் மட்டும் ஏலம் நடைபெறும். மூடைகளை இறக்குவதற்கான இறக்கு கூலி மட்டும் விவசாயிகள் கொடுக்க வேண்டும். ஏலத்தில் கோரப்படும் அதிகபட்ச விலைக்கு விற்க, விவசாயிகளுக்கு சம்மதமில்லை எனில், மறுநாள் ஏலத்தில் வைத்து விற்பனை செய்து தரப்படும்.
ஏல விற்பனையில் விளை பொருட்கள் விற்பனையாகாத பட்சத்தில் வாடகை அடிப்படையில் விளை பொருட்களை இருப்பு வைத்து பின்னர் விற்பனை செய்யலாம். விளை பொருட்களை இருப்பு வைத்து பின்னர் விற்பனை செய்ய விரும்புபவர்கள் விளை பொருளை ஈடு செய்து ரூ.2 லட்சம் வரை 5 சதவிகித வட்டியில் பொருளீட்டுக்கடன் பெறலாம். அதிகபட்சமாக 180 நாட்கள் வரை பொருட்களை இருப்பு வைத்து கொள்ளலாம்.
வியாபாரிகள் கவனம்:
விற்பனைக்கு வரப்பெற்ற விளை பொருளை வியாபாரிகள் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம். குவியல் வாரியாக தாங்கள் கோரும் அதிகபட்ச விலையை, மறைமுக ஏல படிவத்தில் பூர்த்தி செய்து, காலை 11.00 மணிக்குள் ஏலச்சீட்டு பெட்டியில் போட வேண்டும்.
ஏலம் நடைபெறும் நாளில் காலை 11.30 மணிக்கு விவசாயிகள், வியாபாரிகள் முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்படும். மதியம் 2.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிரைய தொகை முழுவதையும் ரொக்கமாக பட்டுவாடா செய்து விளை பொருளை மூடை மாற்றி தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றிட வேண்டும்.
விவசாயிகளுக்கு நன்மை:
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விளை பொருட்களை விற்கும் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம். சரியான எடை, உயர்ந்தபட்ச விலை, உடனடி ரொக்கப்பணம், கமிஷன் தரகு போன்ற பிடித்தம் இல்லை, இலவச தரம் பிரிப்பு மற்றும் உலர் களம் வசதி, கம்ப்யூட்டர் மூலம் அன்றாட மார்க்கெட் நிலவரம் அறியும் வசதி, இருப்பு வைக்க கிட்டங்கி வசதி, குறைந்த வட்டியில் பொருளீட்டுக்கடன், உழவர் நல நிதித்திட்டத்தில் ரூ.ஒரு லட்சம் வரை இலவச காப்பீடு போன்ற நன்மைகள் கிடைக்கப் பெறலாம்.