பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது இவ்வளவு விஷயங்களை கவனிக்க மறக்காதீர்கள்...
அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன.
** பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகள் தெளிப்பான்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லியை வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் பல விவசாயிகள் ஏனோதானோவென்று தெளிக்கின்றனர்.
** அதேபோல், தெளித்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுகின்றனர். வீடுகளிலும் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பு இல்லாத இடங்களில் வைக்கின்றனர். இப்படி பூச்சிக்கொல்லிகளை சரியான முறையில் கையாளாமல் போவதால் பயிர் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
** பூச்சிக்கொல்லிகளை தேவைப்படும் அளவு மட்டுமே வாங்க வேண்டும். உடைந்த, ஒழுகிய, காலாவதியான, மூடி திறந்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை வாங்கக் கூடாது.
** பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள், ஆறு, குளங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி பூச்சிக்கொல்லி டப்பாக்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.. அதனால், நீர்நிலைகளில் இந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.
** பூச்சிக்கொல்லி பாட்டில் லேபிளில் எச்சரிக்கை, ஆபத்து, விஷம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். விஷம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பெரும் ஊறு விளைவிப்பவை. இந்த வகையான பூச்சிக்கொல்லிகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவை அதிக நச்சுத்தன்மை, சுமாரான நச்சுத்தன்மை, மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.
** பூச்சிக்கொல்லி தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உடலிலோ, கைகளிலோ பூச்சிக்கொல்லி பட்டுவிட்டால் உடனே சுத்தம்செய்துகொள்ள முடியும்.
** பூச்சிக்கொல்லி அடித்து முடித்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்ள வணே்டும். கழற்றிய ஆடைகளை சலவை செய்யாமல் மறுபடியும் உடுத்தக் கூடாது. இந்த ஆடைகளை அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளுடன் சேர்த்து சலவை செய்யக் கூடாது.
** பூச்சிக்கொல்லி தெளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ, புகைப்பிடிப்பதோ கூடாது.
** எப்பொழுதுமே பூச்சிக்கொல்லியைக் கலக்கும்பொழுது காற்று வீசும் திசையில் நின்றே கலக்க வேண்டும். கொள்கலனை முகர்ந்து பார்க்கக் கூடாது. காலை, மாலை வேளைகளில் மட்டுமே பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.