வாழையில் தாய்மரத்தை வெட்டக் கூடாது. ஏன் தெரியுமா?
வாழையில் தாய்மரத்தை வெட்டக்கூடாது
வாழை மரம் பூப்பதற்கு முன் வளரும் பக்கக் கன்றுகளை அழித்து விட வேண்டும். வாழை குலை தள்ளிய பிறகு குலைக்கு நேர் எதிர் திசையில் உள்ள பக்கக் கன்றை மட்டும் மறுதாம்பாக விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டிவிட வேண்டும். அதாவது குலை தெற்கு திசையில் இருந்தால், வடக்கு திசையில் உள்ள பக்கக் கன்றை வளர விட வேண்டும்.
அழிக்கும் கன்றுகளை அப்படியே மூடாக்காகப் பரப்ப வேண்டும். அதேபோல வாழைத்தாரை அறுவடை செய்யும்போது தாய்மரத்தை வெட்டாமல் அப்படியே விட்டுவிட வேண்டும். இலைகளை மட்டும் கழித்து மூடாக்காக இட வேண்டும்.
தாய்மரத்தில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு பக்கக்கன்று நன்கு வளரும். சிறிது நாட்களில் அது தானாகக் காய்ந்து சுருண்டு விடும். அதேபோல வாழை அறுவடை வரை மரத்தில் இருந்து இலைகளைக் கழிக்கவே கூடாது.
காய்ந்த இலைகளைக்கூட அப்படியே விட்டு விட வேண்டும். தாய்மரத்தில் அறுவடை முடிந்த பிறகு மீண்டும் மூடாக்குகளுக்கு இடையில் துளை செய்து ஊடுபயிர் விதைகளை விதைத்து விட வேண்டும்.
சந்தையில் வாழையின் விலை அதிக ஏற்றத்தாழ்வுடன் இருப்பதால், ஒரே சமயத்தில் நிலம் முழுவதும் நடவு செய்யாமல் நிலத்தை நான்கைந்து பகுதிகளாகப் பிரித்து மூன்று மாத இடைவெளியில் ஒவ்வொரு பகுதி நிலத்திலும் வாழையை நடவு செய்தால் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம்.
அதனால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். ஜீரோ பட்ஜெட் முறையில் விளையும் வாழை அதிக சுவையோடு இருக்கும். அதிக நாட்கள் கெடாமலும் இருக்கும். அதனால் ஏற்றுமதி வாய்ப்புகளை எளிதில் பெற முடியும்.