மூடப்பழக்க வழக்கங்கள் மனிதனுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, மாடு, ஆடுகளை வளர்ப்பதிலும்கூட இருக்கத்தான் செய்கிறது. அப்பழக்கங்கள் சுட்டெரிக்கப்படும்போது தான் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கிராமங்களில் காணப்படும் சில மூடப்பழக்கங்களையும், சரி செய்ய வேண்டிய முறைகளையும் பார்க்கலாம்.

முதல் மூட நம்பிக்கை:

மாடு உறுப்பு போட்டால் அதப் பால் மரம் பார்த்து கட்டுவது. கறவை மாடு வளர்ப்பவர்கள் மத்தியில் கிராமப் புறங்களிலொரு நம்பிக்கை உண்டு. அது என்னவென்றால் கன்று ஈன்ற பின் மாடு உறுப்பு போடும், அதப் பால் மரமாகப் பார்த்துக் கட்டினால் அந்த கறவை மாடு அதிக அளவு பால் கறக்கும் என்பது தான். ஆனால் அது ஒரு தவறான நம்பிக்கை.

இப்படிச் செய்வதால் உண்மையில் என்ன நடக்கும் தெரியுமா? மரத்தில் கட்டப்பட்ட உறுப்பானது சில நாட்களுக்கு பிறகு துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அந்த துர்நாற்றத்தால் தெருக்களில் உள்ள நாய்களின் கவனம் அதன் மேல் ஈர்க்கப்படும். பின்னர் அந்த உறுப்பை நாய்கள் கடித்து தெருக்களில் எடுத்துச் செல்லும். இதன் மூலமாக மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியே செல்லும் மனிதர்களுக்கு இது ஒரு இடையூறாக இருக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்:

கன்று ஈன்ற பின் மாடு போடும் உறுப்பை ஆழமாக குழி தோண்டி புதைப்பது நல்லது. அந்தக் குழியில் உறுப்பை போட்டு அதனைச் சுற்றி மஞ்சள், உப்பு தெளிக்க வேண்டும். பின்னர் மணலைக் கொண்டு அந்தக் குழியை மூட வேண்டும்.

இரண்டாவது மூட நம்பிக்கை:

இறந்த கால் நடைகளை ஆற்றில் வீசுவது. கால்நடை வளர்ப்பவர்களிடையே மற்றொரு தவறான பழக்கம் உள்ளது. அது இறந்த பின் கால்நடைகளை ஓடும் ஆற்றில் வீசுவது. இப்படிச் செய்வதால் ஆற்றின் ஓரத்தில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் நோய் பரவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இறந்த கால்நடைகளைப் பற்றி எவரும் கால்நடை மருத்துவரிடம் தகவல் கொடுப்பதில்லை இதனால் கோமாரி, அடைப்பான் போன்ற நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்:

இறந்த கால்நடையைப் பற்றி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர் வந்து ஆய்வு செய்யும் வரை இறந்த கால்நடையை எதுவும் செய்யக் கூடாது. இப்படிச் செய்வதால் கால்நடையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.
கோமாரி மற்றுமடைப்பான் போன்ற நோய்களால் கால்நடை இறந்திருந்தால் மருத்துவரின் ஆலோசனையின்படி அதை அடக்கம் செய்ய வேண்டும்.

மூன்றாவது மூட நம்பிக்கை:

சினைக் காலங்களில் அடர்தீவனம் கொடுத்தால் கன்று தலை பெரிதாகி விடும்.
கறவை மாடு வளர்ப்பவர்கள் பொதுவாக கறவை மாடுகளுக்கு மட்டும் தீவனம் அளிக்கும் பழக்கத்தை பின் பற்றி வருகின்றனர். கிடேரி கன்றுகளுக்கும் பருவத்தில் உள்ள மாடுகளுக்கும் தீவனம் குறைவாகவே அளிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கு அதிகம் தீவனம் கொடுத்தால் அது வயிற்றில் வளரும் கன்றின் தலையைப் பெரிதாக்கி விடும் என்றும் நம்புகின்றனர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்:

சினை பருவத்தில் உள்ள மாடுகளுக்கு கறவை மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தை விட ஒரு படி கூடுதலாகக் கொடுக்க வேண்டும். இன்றைய கன்று நாளைய பசு என்பதற்கிணங்க இனை மாடுகளுக்குக் கூடுதல் தீவனம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கன்று நல்ல படியாக வளரும். உறுப்பு ஒழுங்காக போடும். பால் உற்பத்தியில் எந்த விதக் குறைவும் வராது. பிறக்கும் கன்று சரியான நேரத்தில் சினைப் பருவத்திற்கு வரும்.

நான்காவது மூட நம்பிக்கை:

தடுப்பூசி போட்டல் கன்று விசிறிவிடும். தடுப்பூசி போடுவதால் பால் உற்பத்தியும் குறையும், சினை மாடுகள் கன்றை விசிறி விடும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. பொதுவாகத் தடுப்பூசி போடுவதால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் மாடுகளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு சிறு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பால் உற்பத்தியின் அளவு அந்த இரு நாட்களுக்கு மட்டும் குறையும். மூன்றாவது நாளில் இருந்து பழைய நிலைக்குத் திரும்பி விடும். குறைந்த ஆரோக்கியம் கொண்ட பசுக்களே கன்றை விசிறும் நிலைமை ஏற்படும். அதுவும் லட்சத்தில் ஒருகன்றே விசிறப்படுகிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்:

வருடம் இரு முறை தவறாமல் கோமாரி நோய்க்கான தடுப்பூசியை மூன்று மாதத்திற்கு மேல் உள்ள அனைத்டு மாடுகளுக்கும் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மூட நம்பிக்கை:

சினை ஊசி மூலம் பெண் கன்றைப் பெறலாம் மக்களிடையே மற்றுமொரு தவறான நம்பிக்கை உள்ளது. அது சினை ஊசி மூல ஆண் அல்லது பெண்கன்றைத் தேர்வு செய்யலாம் என்பதாகும். இது அறிவியல் பூர்வமாக சாத்தியமில்லை. நஃம் வீட்டில் எந்தக் குழந்தை பிறக்க வேண்டும் என்று நம்மால் முடிவு செய்ய முடியாதோ அதே போல் சினை ஊசி மூலம் ஆண் அல்லது பெண்கன்றைத் தேர்வு செய்ய இயலாது.