அறுவடைக்கு பிறகு பருத்தி சேமிப்பை இப்படிதான் செய்யணும்... அவ்வளவு வழிமுறைகள் இருக்கு...
பருத்தி சேமிப்பு
காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்கு பின்பும் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில் காய்ந்து ஒடிந்த புழுவிதழ்களும், சருகுகளும் சேர்ந்து நல்ல பருத்தியோடு கலந்துவிடும்.
தும்பும் தூசியும் இல்லாதபடி எடுக்கப்படும் சுத்தமான பருத்திச் சுளைகளை தனியாக துணிப்பையிலோ, சாக்குப் பையிலோ வைத்துக்கொண்டு செடியிலிருந்து கிடைக்கும் தரம் குறைந்த கொட்டைப் பருத்தியை தனியாக இன்னொரு பையிலுமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
துணிப்பையில் சேமிப்பதால், பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை, வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் சூரிய வெப்பத்தில் காயும்படி போட்டு விடுவதோ கூடாது.
மரநிழலிலோ அல்லது பண்ணையைச் சேர்ந்த வீட்டு முற்றங்களிலோ, கெட்டியான மண் அல்லது சிமெண்ட் தரையிலோ பருத்தியை அம்பாரம் போட்டு வைக்க வேண்டும். விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து. சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எங்கெங்கு பருத்தி தரம் பிரிக்கும் வசதிகள் உள்ளனவோ அவற்றை பருத்தி விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பருத்திக்கு தனி மதிப்பும், கூடுதல் விலையும் உண்டு.