வறட்சியை தாங்கி வளரும் பயிரான மக்காச்சோளம் சாகுபடி செய்து லாபம் அள்ளலாம்…
ஒரு வித்திலை தாவரங்களில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் இருப்பது மக்காச்சோளம்.
இதன் வயது 110 நாட்கள். இறவை மற்றும் மானாவாரியில் பயிரிடப்படுகின்றது. நன்கு வறட்சி தாங்கி வளரும் பயிர். ஏக்கருக்கு பத்து கிலோ வரை விதை தேவை.
1×1 அல்லது 1×1.5 அடி இடைவெளியில் நடவு செய்வது சிறந்தது. நன்கு உழவு செய்து ஏக்கருக்கு குறைந்தது 10 டன் தொழு உரம் இட வேண்டும். பின் பார் பிடித்து அதன் ஓரங்களில் விதை ஊன்றி விடவேண்டும். பின்னர் மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும்.
கற்பூரகரைசல் தெளித்தால் எந்த ஒரு வியாதியும் தாக்காது. மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் வேரில் அளிப்பதன் மூலம் அதிக கதிர்கள் நெருக்கமான சோள மணிகளை பெறலாம்.
மக்காசோளம் நடவு செய்த பதினைந்தாவது நாளில் முதல் களை எடுக்க வேண்டும். நுன்னூட்ட சத்துக்கள் அதிகம் தேவை. தழை சத்து சற்று கூடுதலாக தேவைப்படும். நாற்பது நாட்களுக்கு பிறகு பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஒரு செடியில் குறைந்த பட்சம் இரண்டு, அதிகபட்சம் நான்கு கதிர்கள் வரை வரும்.
இது மட்டுமே இல்லாமல் இளம் பிஞ்சு சோள கதிர்களுக்கு, அதாவது பேபி கார்ன் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஊடுபயிராகவும் சில சமயங்களில் பயிரிடப்படுகின்றது. அடுத்த படியாக கால்நடை தீவனங்களில் மக்காச்சோளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக கோழி தீவனங்களில் மக்காச்சோளம் சேர்க்க படுகிறது. ஏனெனில் கார்போ ஹைட்ரேட் சத்து மக்காசோளத்தில் அதிகம் உள்ளது.
அறுவடை இயந்திரம் மூலமாக செய்வது எளிதாக இருக்கும். மக்காசோள அறுவடைக்கு பிறகு காய்ந்த சோளத் தட்டு மாடுகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்த படுகிறது.
மக்காசோளத்தின் வேரில் விஏஎம் என்ற இயற்கை வேர் பூஞ்சானம் உள்ளதால் இந்த பயிருக்கு அடுத்து பயிரிடும் நிலக்கடலை பயிரில் நன்கு திரட்சியான காய்கள் கிடைக்கும்.