தென்னை நார்க் கழிவுகளைக் கொண்டும் உரம் தயாரிக்கலாம்…
தென்னங்கயிறு தொழில்சாலைகளில் இருந்து கிடைக்கும் நார்க் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு வீணாகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் நார்க் கழிவுகள் இவ்வாறு வீணாகின்றன.
இந்த நார்க்கழிவில் விரைவில் மக்காத லிக்னின், செல்லுலோஸ் ஆகியவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.
இதில் கரிமம், தழைச்சத்து 21:1 என்ற விகிதத்தில் இருப்பதால் இதை அப்படியே உபயோகிக்க முடியாது. எனவே, தென்னை நார்க்கழிவை புளுரோட்டஸ் என்ற காளானைக் கொண்டு மக்க வைத்து, சத்துகளின் அளவை அதிகரிக்கச் செய்து சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.
முதலில் நாரற்ற கழிவுகளை 3 அங்குல உயரத்துக்கு பரப்பி நன்கு நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். பின்னர் தழைச் சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப் பொருள், உதாரணமாக கோழிப் பண்ணைக் கழிவுகளை சேர்க்க வேண்டும். தழைச் சத்துக்காக ஒரு டன் கழிவுக்கு 200 கிலோ கோழி எரு பரிந்துரைக்கப்படுகிறது.
முதலில் ஒரு டன் கழிவை 10 சம பாகங்களாக பிரித்து, முதல் அடுக்கின் மேல் 20 கிலோ கோழி எருவைப் பரப்ப வேண்டும். பின்னர் நுண்ணுயிர்க் கலவைகளான புளுரூட்டஸ், பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக் கலவை (2 சதவீதம்) கழிவின் மேல் இட வேண்டும்.
இதேபோல, நார்க்கழிவு, தழைச் சத்து மூலப் பொருள்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். குறைந்தபட்சம் 4 அடி உயரத்துக்கு இது இருக்க வேண்டும். இந்த கழிவுக் குவியலை 15 நாள்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். தரமான உரத்தைப் பெற ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் அவசியம்.
கழிவுகள் 60 நாள்களில் மக்கி உரமாகிவிடும். கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி, துகள்கள் சிறியதாக மாறும், மக்கிய உரத்தில் இருந்து மண்வாசனை வருவதைக் கொண்டு உரம் தயாரானதை அறியலாம்.
அனைத்து வகையான அங்கக உரங்களையும் எல்லா வகையான பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். இந்த உரங்களை விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.
நாற்றாங்கால்களுக்கும், பாலித்தீன் பைகள், மண் தொட்டிகளில் நிரப்ப வேண்டிய மண் கலவைகளுக்கு 20 சதவீதம் மக்கிய நார்க் கழிவை மணலுடன் கலந்து தயாரிக்க வேண்டும். தென்னை, மா, வாழை உள்ளிட்ட நன்கு வளர்ந்த பழ வகை மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.