Asianet News TamilAsianet News Tamil

மிளகாய் சாகுபடி – முக்கிய பிரச்சனைகள் முதல் அறுவடை வரை ஒரு அலசல்…

Chilli cultivation a gadget until the problems of the first harvest
chilli cultivation---a-gadget-until-the-problems-of-the
Author
First Published Apr 6, 2017, 11:48 AM IST


மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.

மானாவாரி மிளகாய் சாகுபடியில் முக்கிய பிரச்சனைகள்:

1.. ஆரம்ப கால விதை முளைத்தல்,

2.. இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள்,

3.. மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு

ரகங்கள்:

கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் இருக்கின்றன.

பருவம்:

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும்.

ஏற்ற மண்:

மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.

விதை அளவு:

ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும்.

அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.

விதைப்பு:

நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும். மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.

பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும். மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.

பயிர் முளைத்த 30 ஆம் நாள் களை எடுக்க வேண்டும். பூக்கள் கொட்டுவதைக் குறைக்கவும், பிஞ்சுகள் உதிர்வதைத் தவிர்க்கவும், பயிர் முளைத்த 90 மற்றும் 120 ஆம் நாளில் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தை 4.5 லிட்டர் நீருக்கு 1. மி.லி. என்ற விகிதத்தில் கலந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் மேல் படும்படி தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்க மருந்துடன் கலக்கும் நீர் உப்பு நீராக இருக்கக் கூடாது. நிலத்தில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

களை நிர்வாகத்தைப் பொருத்தவரை மிளகாய் விதை விதைத்து முதல் மழை கிடைத்தவுடன் ஹெக்டேருக்கு 1.0 லிட்டர் ப்ளுக்ளோரலின் அல்லது 3.3லிட்டர் பெண்டிமித்தலின் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை 500 லிட்டர் நீரில் கலந்து முளைக்கும் முன் இடவேண்டிய களைக்கொல்லியாகத் தெளிக்க வேண்டும்.

பூச்சிகளின் வகைகள்

1.. இலைப்பேன்:

இவை இலையைச் சுருட்டி சாற்றை உறிஞ்சி விடும். இவற்றை கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. தெளிக்கலாம்.

2.. அசுவினி:

இவை கூட்டமாக இலையின் மேல் குருத்துக்களில் பூ மொட்டுகளில் மற்றும் காய்களில் காணப்படும். அசுவினியைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிப்பேட் 200 கிராம் அல்லது மாலத்தியான் 200 மி.லி. தெளிக்கலாம்.

3.. காய்ப் புழு:

புரடீனியா மற்றும் பச்சைக் காய்ப் புழுக்கள் இலைகளையும், காய்களையும் தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திட ஆமணக்குச் செடியை வரப்பு ஓரத்தில் பொறிப் பயிராக விளைவித்து புரடீனியா பூச்சியின் முட்டைக் குவியல்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதத்தை சோப்பு போன்ற ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை பின்செய் நேர்த்தி முறைகள்:

மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாளக் கொல்லிகள் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும். காய்கள், ஹிலியாத்திஸ் புரடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நிறமும், காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களை காம்புடன் பறிக்க வேண்டும்.

பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும். மணல் பரப்பிய கலங்களில் பழங்களைப் பரப்பி உலர விட வேண்டும். மிதமான வெப்பநிலை உள்ள காலையிலும், மாலையிலும் 4 நாட்கள் உலர விட வேண்டும்.

நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலில் இருந்து காய்ப் புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.

அறையின் ஈரம் மிளகாய் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும். இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதா போட்டு மூடி வைக்கலாம்.

நல்ல நிறத்துடன் நீர் தெளிக்கப்படாமலும் காரல் வாடை இல்லாத வற்றல் மிளகாய் நல்ல குணத்துடன் நீண்டநாள் கெடாமலும் இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios