வாழைக்கு உரிய ஊட்டச் சத்துகளை சரியான காலங்களில் வழங்குவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்…

banana yield-is-obtained-by-providing-the-proper-nutrie


வாழைக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துகளை பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

வாழைக்கு தழை, மணி, சாம்பல் சத்துகள் ஆகிய பேரூட்டங்களும், கால்சியம், மக்னீசியம், கந்தகம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்பு, தாமிரம், போரான் ஆகிய நுண்ணூட்டங்களும் தேவைப்படுகின்றன.

பேரூட்டங்கள் அதிகளவிலும், நுண்ணூட்டங்கள் குறைந்த அளவிலும் தேவைப்படுகின்றன.

பேரூட்டங்கள்:

அ. தழைச்சத்து குறைபாடு அறிகுறிகள்:

எல்லா இலைகளும் வெளிறிய பச்சை நிறத்தில் காணப்படும். இலையில் நடுநரம்பு, இலைக் காம்பு, இலை உறைகள் மற்றும் தண்டுப்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இலைகள் வெளிவருவது தாமதப்படும். இலைகளுக்கு இடையே இடைவெளி குறைவாக காணப்படும். தார்கள் மற்றும் காய்களின் அளவு சிறியதாகவும், தரம் குறைந்ததாகவும் காணப்படும்.

அறிகுறிகள் தெரிந்தவுடன் 100 கிராம் யூரியாவை ஒவ்வொரு மரத்துக்கும் இட்டு நன்குநீர் பாய்ச்ச வேண்டும்.

ஆ. மணிச்சத்து குறைபாடு அறிகுறிகள்:

மரத்தின் வளர்ச்சி குன்றி காணப்படும். வேர் வளர்ச்சி இருக்காது. முதிர்ந்த இலையில் ரம்ப பற்களின் அமைப்புபோன்று ஓரங்களில் பசுமையற்று காணப்படும். இளம் இலைகள் நீலப்பச்சை நிறத்தில் காணப்படும்.

அறிகுறிகள் தெரிந்தவுடன் ஒரு மரத்துக்கு 50 கிராம் டி.ஏ.பி. உரத்தையோ அல்லது 300 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரத்தையோ குழிப் பறித்து இட்டு உரங்கள் கரையும் அளவுக்கு நன்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

இ. சாம்பல் சத்து குறைபாடு அறிகுறிகள்:

அடி இலைகள் சீக்கிரமாக மஞ்சளாக மாறிக்காய்வது இச்சத்துப் பற்றாக்குறையின் மிக முக்கிய அறிகுறியாகும். முதலில் அடி இலையின் நுனி மற்றும் ஓரங்கள் மஞ்சளாக மாறி, பின் இலையின் உள்புறமாக நடுநரம்பு நோக்கிப் பரவி இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி இலைகள் வாடி

இறந்து விடுகின்றன. மேலிருந்து 5, 6-ஆம் இலைகள் வேகமாக மஞ்சளாக மாறுவது இன்னொரு முக்கிய அறிகுறி.

இலைகள் வெளிவருவது தாமதப்படும். தாரில் உள்ள காய்களின் எண்ணிக்கை குறையும். காய்கள் சிறுத்தும் தரம் குறைந்தும் காணப்படும். இதற்கு ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் அளவில் பொட்டாசியம் சல்பேட் கலந்து ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒரு மரத்துக்கு 225 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை 125 கிராம் யூரியாவுடன் கிண்ணம் பறித்து இட்டு நீர் பாய்ச்சலாம்.

நுண்ணூட்டங்கள்:

அ. கால்சியம் சத்து (சுண்ணாம்பு சத்து) குறைபாடு அறிகுறிகள்:

இலைகள் உருமாறி இலைப்பரப்பு குறைந்து, ஈட்டி போன்று காணப்படும். இலைகளின் ஓரங்களில் காய்ந்தும், இலையில் உள்ள நரம்புகள் தடித்தும் இருக்கும்.

ஒவ்வொரு மரத்துக்கும் 50 கிராம் நீர்த்த சுண்ணாம்பை மண்ணில் இட்டு நன்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

ஆ. மக்னீசியம் சத்து குறைபாடு அறிகுறிகள்:

இலைக்காம்பின் அடிப்புறம், இலை நடுநரம்பு ஆகிய பகுதிகளில் ஊதா கலந்த நீலம் மற்றும் பழுப்பு நிறத் திட்டுகள் காணப்படும். இவை இலை தேமல் போல் தோற்றமளிக்கும். சில சமயம் நடுநரம்பு இலை மையப்பகுதி மஞ்சளாகவும், இலையின் ஓரங்கள் பச்சையாகவும் இருக்கும், தண்டில் இருந்து இலை உறைகள் பிரிந்து காணப்படும்.

ஒவ்வொரு மரத்துக்கும் 25 கிராம் மக்னீசியம் சல்பேட் இட்டு உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

இ. கந்தகச் சத்து குறைபாடு அறிகுறிகள்:

நடுக்குருத்து இலை மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ காணப்படும். இலைகள் மிகவும் மென்மையாகவும், மிகவும் பலமற்றதாகவும் எளிதில்

கிழிந்துவிடக் கூடியதாகவும் இருக்கும். 3,6,7ஆம் மாதங்களில் கந்தகக் குறைபாடு ஏற்பட்டால் புதிய இலைகள் நன்கு வளர்ச்சி பெறாமல் சிறிதாகக் காணப்படும்.

இலைகளின் ஓரங்கள் காய்ந்தும், இலைகளின் நரம்புகள் புடைத்தும், இலைப்பரப்பு இல்லாமல் வெறும் நரம்புகள் கொண்ட இலைகளாகவும் இருக்கும். இதனால் மரத்தின் வளர்ச்சி குன்றி தார்கள் மிகச்சிறியதாகவோ அல்லது முற்றிலும் நீளாமல் குட்டையாகவோ காணப்படும். மரம் ஒன்றுக்கு கந்தகச்சத்து 15 சதவீதம் உள்ள 20:20:0:15 காம்பளக்ஸ் உரம் 20 கிராம் அல்லது 100 கிராம் அம்மோனியம் சல்பேட் உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

ஈ. துத்தநாக சத்து குறைபாடு அறிகுறிகள்:

இலைகள் வெள்ளையாக காணப்படும். இளம் இலைகள் மிகச் சிறியதாகவும், ஈட்டி முனைபோன்றும் காணப்படும். விரிந்த இலையில் வெளிறிய பச்சை நிற வளையங்கள் மாறி மாறி காணப்படும். காய்களின் நிறங்கள் வெளிறிய பச்சை நிறத்திலும், திருகியும், சிறியதாகவும் ஒல்லியாகவும் காணப்படும். 

மரம் ஒன்றுக்கு 15 முதல் 30 கிராம் துத்தநாக சல்பேட் இட்டு உடன் நீர் பாய்ச்ச வேணடும்.

உ. மாங்கனீஸ் சத்து குறைபாடு அறிகுறிகள்:

வாழையில் மேலிருந்து 2ஆம், 3ஆம் இலை ஓரங்கள் வெளிறிய நிறத்துடன் இருக்கும். இந்த வெளிறிய நிறம் பிரதான நரம்புகள் மூலம் நடுநரம்பு வரை பரவும். எனவே இலைநரம்புகள் வெளிறியும், இடைப்பட்ட பகுதிகள் பச்சையாகவும் காட்சியளிக்கும்.

 ஏக்கருக்கு 16 கிலோ மாங்கனீஸ் சல்பேட் இட்டு நீர் பாய்ச்சலாம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் மாங்கனீஸ் சல்பேட்டை ஒட்டும் திரவம் கலந்து இலைவழி தெளிக்கலாம்.

ஊ. இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள்:

இளம் இலைகள் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ இருக்கும்.

 ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் இரும்பு சல்பேட்டை ஒட்டும் திரவம் கலந்து இலைவழி தெளிக்கலாம்.

எ. தாமிரச் சத்து குறைபாடு அறிகுறிகள்:

குருத்து இலை விரிவடையாமல் வால் போல் காட்சியளிக்கும். இலைகளில் பச்சையம் குறைந்து, இலைகள் வெளிர்பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகள் மிகவும் சிறுத்து காணப்படும்.

இக் குறைபாடு அதிகமாக உள்ளபோது இலைகள் வெள்ளையாக மாறி இலைகளின் எண்ணிக்கை குறைந்து மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தாமிர சல்பேட்டை ஒட்டும் திரவம் கலந்து இலைவழி தெளிக்கலாம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தாமிர சல்பேட் கலந்த கரைசலை மரத்துக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தேவைக்கேற்ப 10 நாள்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை மரத்தை சுற்றியும், குருத்துப் பகுதியிலும் ஊற்றலாம்.

ஏ. போரான் சத்து குறைபாடு அறிகுறிகள்:

இலைகள் வளைந்தும், இலை பரப்பு குறைந்து உருமாறியும் காணப்படும். இலையின் அடிப்பாகத்தில் இலை நரம்புகளுக்கு இணையாக வெள்ளை நிறப்பட்டைகள் காணப்படும். இளம் இலைகளில் இலை பரப்பு சிறுத்து காணப்படும். குருத்து இலைகள் விரிவடைவதில்லை. வேர் வளர்ச்சி தடைபடும். பூ வருவது நின்று விடும்.

சோடியம் டெட்ரா போரேட் என்ற போராக்ஸ் உப்பை மரம் ஒன்றுக்கு 25 கிராம் என்ற அளவில் மரத்தை சுற்றி மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். விவசாயிகள், வாழை பயிரில் இந்த சத்துக்குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால் பயிர் மாதிரியுடன் அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி குறைபாட்டை உறுதி செய்து கொண்டு, உரிய பரிந்துரையை பெற்று செயல்படுத்தி வாழையில் அதிக மகசூல் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios