Banana and banana crops and yielding ...

இரகங்கள்

வாழைப்பழத்திற்கு: ரோபஸ்டா, குள்ள வாழை, கோ.1 மட்டி மற்றும் சன்ன செங்கதலி. காவன்டிஷ் இரகங்கள் ஏற்றுமதிக்கு உகந்ததாகும்.

வாழைக்காயாக உபயோகப்படுத்துவதற்கு: மொந்தன், நேந்திரன், வயல் வாழை மற்றும் சாம்பல் நிற மொந்தன்.

மலைப்பகுதிக்கு ஏற்ற இரகங்கள்: விருப்பாட்சி, சிறுமலை, செவ்வாழை, மனோரஞ்சிதம், நமரை மற்றும் லாடன்.

மண்ணும் தட்பவெப்பநிலையும்: நல்ல வடிகால் வசதியுள்ள இரும்பொறை மண் உகந்தது. காரமண் மற்றும் உப்ப மண் உகந்ததல்ல.

கன்றுகள் தேர்வும் நேர்த்தியும் சீரான வளர்ச்சிக்கும், நல்ல மகசூல் பெறவும் தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் வேண்டும். தாய் மரத்திற்கு அருகாமையில், கிழங்கிலிருந்து வளரும், 2 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சுமார் 3 மாத வயதான ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. கன்றின் எடை 1.5 முதல் 2.0 எடையுள்ளதாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்காத கிழங்குகளாகவும் இருக்கவேண்டும்.

கிழங்கின் அடிப்பகுதியுள்ள வேர்களை நீக்கிடவேண்டும். கிழங்கின் மேல் பகுதியுள்ள தண்டுப்பகுதி 20 செ.மீ இருக்குமாறு தேர்ந்துதெடுக்கவும். வாடல் நோயைத் தவிர்க்க கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம் எமிசான் கரைசலில் (1 கிராமினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும்) நனைத்து நடவு செய்யவேண்டும்.

வாடல் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாத இரகங்களாகிய ரஸ்தாளி, மொந்தன், நெய் வண்ணன் மற்றும் விருப்பாட்சி போன்ற இரகங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும்.

நூற்புழு தாக்குதலைத் தவிர்க்க, தோல் சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன் மீது கார்போ புயூரான் குருணை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற அளவில் தூவி நடவேண்டும். அல்லது 0.75 சதம் மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் கிழங்குகளை தோய்த்து நிழலில் சுமார் 24 மணி நேரம் உலர்த்தி நடவேண்டும். 5-6 இலைகள் உள்ள திசு வளர்ப்பு கன்றுகளை நடவு செய்யலாம். நடவின் பொது ஒரு கன்றுக்கு 25 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் இடவேண்டும்.

மேலும் சணப்பை போன்ற பசுந்தாள் உரங்களை 45 நாள் வளர்த்து உழுதல் வேண்டும். இதன் மூலம் நூற்புழு எண்ணிக்கையினை குறைக்கலாம்.

நிலம்தயாரித்தல்:

நன்செய் நிலங்களுக்கு: லேசாக மண்ணைப் பறித்து அதன்மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டுப்பின் மண் அணைக்கவேண்டும். தோட்டக்கால் நிலங்களுக்கு: 2 முதல் 4 தடவை நன்கு உழவேண்டும். படுகை நிலங்களுக்கு: மண்வெட்டியால் ஒரு டஅடி ஆழமாகத் கொத்திடவேண்டும். மலைப்பகுதிகளுக்கு:வனப்பகுதியை சரி செய்து சம உயர வரப்பு அமைக்கவேண்டும்.

குழியெடுத்தல்

தோட்டக்கால், படுகை மற்றும் மலை வாழைகளுக்கு 45 கன சென்டிமீட்டர் அளவுள்ள குழிகளை எடுத்து ஒவ்வொரு குழிகளிலும் 10 கிராம் தொழு உரம், 250 வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு மேல் மண்ணோடு நன்கு கலக்கி, குழியின் நடுவில் நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகளை வைத்து மண்ணால் மூடி சுற்றிலும் நன்கு மிதித்துவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்த உடனே நீர்ப்பாய்ச்சவேண்டும். அதற்குப்பிறகு 4 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர், வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து தோட்டக்கால் நிலத்திற்கு மற்றும் 10-15 நாட்களுக்கு ஒரு முறை நஞ்சை பகுதிகளுக்கும் நீர்ப்பாய்ச்சவேண்டும். உரமிட்ட பிறகு அதிக அளவு நீர்ப்பாய்ச்சவேண்டும்.

அறுவடை:

கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மண், இரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.