கற்றாழை சாகுபடி; மண்வளம் முதல் மகசூல வரை ஒரு அலசல்…
உலகம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புள்ள கற்றாழை பல்வேறு மாவட்டங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடைக்கிறது.
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது.
சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும்.
செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.
மண்வளம்
தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.
தட்ப வெப்ப நிலை
வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.
பயிர் பெருக்கம்
தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.
விதைக்கும் பருவம்
ஜுன், ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.
நிலம் தயாரிப்பு
நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.
உரமிடுதல்
கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.
நீர்ப்பாசனம்
கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.
பயிர் பாதுகாப்பு
கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.
அறுவடை
வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.
மகசூல்
எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும்