தமிழனின் உயிர்மரம் “பனைமரம்”…
பனை நமது கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடும் பல தலைமுறைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தின் அடையாளமாகவும் இது திகழ்கிறது.
பனைக்கு எருவோ, உரமோ எதுவும் தேவையில்லை. தண்ணீரும் குறைந்த அளவே போதுமானது. முறையான பராமரிப்பின்றி முளைத்து, வளர்ந்துவிடும் தன்மை இதன் சிறப்பாகும்.
பனை ஒரு மரம் என்பதை விட இம் மண்ணுக்கு கிடைத்த வரம் என்றே கூறலாம். கடுமையான வறட்சியையும் தாங்கிக் கொண்டு பலவிதமான பொருளாதாரப் பலன்களைத் தரவல்லது.
பழங்காலத்தில் பனை வெற்றி, அமைதி, வளமை ஆகியவற்றை குறிக்கும் சின்னமாக விளங்கியது. மூவேந்தர்களில் ஒருவரான சேர அரசன் பனம்பூவைச் சூடியதாக தமிழ் இலக்கியங்களின் மூலம் அறியலாம்.
பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினங்களில் காணப்படும் ஆண், பெண் என்ற பாலின வேறு பனைமரத்திலும் காணப்படுகிறது. கைவடிவமான விசிறி போன்ற தனியிலைகளையும், கிளையில்லாது நெடிதுயர்ந்த தண்டுப்பகுதியையும் உடைய பூக்கும் தாவரம் ஆகும்.
மரச்சட்டம், விறகு, இலை, நுங்கு, பனம்பழம், பதனீர், பனங்கிழங்கு, கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கல்கண்டு, கைவினைப் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் ஆகியவை பனைமரத்திலிருந்து கிடைக்கின்றன.
அடைமழைகாலங்களில் இடிதாங்கிகளாய் செயல்பட்டுதான் எரிந்து ஓலை குடிசைகளையும், மாட்டுக் கொட்டைகளையும் காப்பாற்றிய வரலாறும் பனைமரத்திற்கு உண்டு.
மானாவாரிப்பகுதிகள், தரிசு நிலங்கள், கரடுமுரடான மேட்டுப் பகுதிகள், பாசனப் பற்றாக்குறையுள்ள தோட்டக்கால் பகுதிகளில் பனைமரத்தை வளர்க்கலாம். இதன் நிழல் சாகுபடி செய்த பயிரைப் பாதிக்காது என்பதால் எல்லாவகை பயிர் நிலங்களிலுமே வரப்பு மற்றும் வேலியோரங்களிலும் வளர்த்து பயன்பெறலாம்.
எல்லா வகையான மண்ணிலும் பனைவளரும் என்றாலும் மணல்சாரி மற்றும் இருமண்பாட்டு நிலங்களில் நன்றாக வளரும். வறட்சியான மற்றும் மழை வளம் குறைந்த பகுதிகளுக்கு பனை ஏற்றது.
பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும் நாற்றுவிட்ட பனங்கிழங்குகளை எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம். நேரடி விதைப்பிற்கு 3 X 3 மீட்டர் இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 444 குழிகள் எடுக்கலாம். குழியானது 20 X 20 X 20 சென்டி மீட்டர் அளவில் இருக்க வேண்டும். தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழிவரை நிரப்ப வேண்டும்.
பிறகு முதிர்ந்த பனம் பழத்திலிருந்து எடுக்கப்பட்டு மூன்று வாரம் நிழலில் சேமிக்கப்பட்ட பனங்கொட்டைகளை குழிக்கு 3 முதல் 4 வரை போட்டு காய்ந்த இலைசருகுகளைக் கொண்டு மூடிவிடவும்.
விதைப்பினை மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும். விதைத்து மூன்று வாரங்களில் பனங்கொட்டைகள் முளைக்கத் தொடங்கும். ஆறு வாரங்களில் முளைப்பு முடிந்து விடும். 63% கொட்டைகள் தான் முளைக்கும். ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியை விட்டுவிட்டு மற்ற செடியை பிடுங்கி விடலாம்.
மணலில் பனங்கொட்டைகளை விதைத்து நாற்றுவிட்டும் நடவு செய்யலாம். 2 ½’ X 2’ மணல் படுகையில் 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பனங்கொட்டைகளை இட்டு மணலால் மூடிவிட வேண்டும்.மணல் சரியாமல் இருக்க செங்கல்லை வரிசையாக அடுக்கிவிடலாம்.
மழை இல்லாத போது நாற்றுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒருவருடத்தில் நடுவதற்கு பனங்கன்றுகள் தயாராகிவிடும். வருடாவருடம் ஆட்டுகிடை போட்டால் பனங்கன்றுகள் நன்றாக வளரும்.
பனைமரம் மிகமிக மெதுவாக வளரும் மரமாகும். முதல் குருத்தோலை விதைத்து 5 மாதங்கள் கழித்துத்தான் தோன்றும். நன்றாக விரிந்த முதல் பனை ஓலை இரண்டாம் ஆண்டு தான் தெரியும். 13 முதல் 15 வருடம் கழித்து சுமார் 12 முதல் 13 மீட்டர் உயரம் வளர்த்தபின் தான் பாளை விட்டு பதனீர் கொடுக்கும்.
சராசரியாக ஒருமரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும். தை முதல் ஆனி மாதம் வரை பதநீர் கிடைக்கும். பதநீர் மற்றும் நுங்கு விளைச்சல் மரத்திற்கு மரம் மாறுபடும். ஒரு லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனை வெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் பதனீர் மூலம் சுமார் 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்யலாம்.
ஒரு மரத்தில் 5 முதல் 6 முட்டிகள் கட்டி 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 2 லிட்டர் பதநீர் வரை சேகரிக்கலாம். 15 லிட்டர் பதநீரை கொப்பரையில் ஊற்றி 2 ½ மணிநேரம் காய்ச்சி பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
பெண் மரத்தில் அதிகபட்சமாக 10 லிட்டர் பதநீர் கிடைத்தால் ஆண் மரத்தில் 7 லிட்டர் தான் கிடைக்கும். 2 முதல் 4 மரம் ஏறி ஒரு கட்டு ஓலை வெட்டலாம். ஒரு கட்டிற்கு 40 ஓலை வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
பனைமட்டையை ஊறவைத்து நைத்து அதிலிருந்து பெறப்படும் நாரினைக் கொண்டு கயிறு தயாரிக்கப்படுகிறது. ஓலையைக் கொண்டு பாய் மற்றும் பெட்டிகள் செய்யப்படுகின்றன.
பனை ஓலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து குருதி கீழ்க்கசிவைத் தடுக்கும். நுங்கு சிறுநீர் பெருக்கி வெப்பத்தைக் குறைத்து உடலை உரமாக்கும். பதநீர் சிறுநீர் பெருக்கி குளிர்ச்சி உண்டாக்கும்.
திருப்பனந்தாள், திருமழப்பாடி, திருப்பனையூர் ஆகிய சிவதலங்களில் பனைமரம் தலவிருட்சமாக உள்ளது.
பனைமரம் இந்தியாவில் 8.6 கோடியும், அதில் பாதிக்கு மேல் சுமார் 5 கோடி தமிழ்நாட்டில் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
ஆனால் அதிகரித்து வரும் செங்கல் சூளைத் தொழிலால் இப்பொழுது பனை மரங்கள் அழிந்து வருகின்றன.
பருவநிலை மாறுதலை சமாளிப்பதில் பனைக்கு நிகர் எதுவும் இல்லை. காடு, மேடு, தரிசு, வயல், தோட்டம் என்று எங்கு வேண்டுமானாலும் வளர்ந்து பலன்தரும் கற்பக விருட்சமான பனையை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.