ஆழ்கூள வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்ப்பதால்  கிடைக்கும் நன்மை மற்றும்  தீமைகள்...

Advantages and disadvantages of developing chickens in litter system ...
Advantages and disadvantages of developing chickens in litter system ...


ஆழ்கூள முறை வளர்ப்பு

இந்த முறையில் கோழிகள் எப்போதும் கொட்டகையிலேயே வைத்து பராமரிக்கப்படுகின்றன. தீவனம், தண்ணீர் மற்றும் கூடுகள் போன்றவை கொட்டகையிலேயே அளிக்கப்படுகின்றன. கொட்டகையின் தரையில் கோழிகளுக்குத் தேவையான ஆழ்கூளத்தை 3 முதல் 5 இஞ்ச் உயரத்திற்கு இடவேண்டும். 

பொதுவாக நெல் உமி, மரத்தூள், கடலைப்பொட்டு, நறுக்கப்பட்ட வைக்கோல், போன்றவை ஆழ்கூளப்பொருட்களாகப் பயன்படுகிறது. இதனால் பண்ணையில் வேலையாட்கள் கோழிகளின் எச்சத்தை சுத்தம் செய்யும் நேரம் குறைவு. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆழ்கூளப்பொருட்களை இரண்டு இஞ்ச் உயரத்திற்கு போடவேண்டும்.

நன்மைகள்

வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி 12 போன்றவை ஆழ்கூளத்தில் பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக இயற்கையாக கோழிகளுக்கு கிடைக்கிறது.
கோழிகளின் நலன் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது.

கோழிக்கொட்டகையில் பயன்படுத்தப்பட்ட ஆழ்கூளம் ஒரு சிறந்த உரமாகப் பயன்படுகிறது.

கூண்டு வளர்ப்பு முறையினை விட இம்முறையில் ஈக்களின் மூலம் ஏற்படும் தொல்லை குறைவு.

தீமைகள்

கோழிகளுக்கும் ஆழ்கூளத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதால் கோழிகளுக்கு பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களின் தாக்குதல் அதிகம்.

ஆழ்கூளத்திலிருந்து தூசுகள் வருவதால் கோழிகளுக்கு சுவாச மண்டலம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.

ஆழ்கூளத்திற்காக செய்யப்படும் செலவு ஒரு அதிகப்படியான செலவினமாகும்.

காற்றோட்டம் குறைவாக இருந்தால் கோழிகளுக்கு கூண்டு முறையில் ஏற்படும் பாதிப்புகளை விட ஆழ்கூள முறையில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம்.

சேர்ந்த ஆழ்கூளம்

கோழிகளின் எச்சமும், ஆழ்கூளமும் சேர்ந்து மக்கி உரமாக மாறுகிறது. இதன் அளவு கோழிக்கொட்டகையில் 8-12 இஞ்ச் உயரத்தை அதன் உண்மையான அளவான 3-5 இஞ்சிலிருந்து அதிகரிக்கும். ஆழ்கூளத்தின் மீது பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக அவை மக்கி, வெப்பம் உற்பத்தியாகி ஆழ்கூளத்தை வெதுவெதுப்பாகவும், உலர்வாகவும் வைக்கிறது. 

கோழிகளின் எச்சம் கொட்டகையில் இடப்பட்ட ஆழ்கூளத்தின் அளவை விட அதிகரிக்கும்போது புதிதாக ஆழ்கூளத்தை சேர்ப்பதால் அதிலுள்ள எச்சத்தின் அளவைக் குறைக்க முடியும். கோழிக்கொட்டகையிலுள்ள ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுவதால் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகரித்து, ஆழ்கூளம் நன்றாக மக்கும். ஒரு வருடம் கழித்து ஆழ்கூளத்தை மாற்றி, மக்கிய ஆழ்கூளத்தை நல்ல உரமாக உபயோகிக்கலாம். 

நன்றாக உருவான ஆழ்கூளம் மற்றும் கோழி எச்சம் கலந்த உலர்வாகவும்,உடையக்கூடியதாகவும், விரும்பத்தகாத வாசனைகள் அற்றதாவும் இருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios