கோழி முட்டைகளை அடைகாக்கும் இயந்திரங்கள் பற்றி ஒரு அலசல்...
சூடாக்கும் ஆதாரத்தைப் பொருத்து கோழி முட்டைகளை அடைகாக்கும் இயந்திரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1.. சூடான காற்று உள்ள முட்டை அடைகாப்பான்
2.. சூடான தண்ணீர் உள்ள முட்டை அடைகாப்பான்
உபயோகிக்கப்படும் எரிபொருளைப் பொருத்து கோழி முட்டைகளை அடைகாக்கும் இயந்திரங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.. வாயுவால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
2.. எண்ணெயால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
3.. மின்சாரத்தால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
குஞ்சு பொரிப்பகங்கள் உள்ள இடம்
நவீன முறையில் வடிவமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்கள், குஞ்சு பொரிப்பகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பல அறைகளுடன் கட்டப்படுகின்றன.
குஞ்சு பொரிப்பகம் உள்ள இடம் அதற்கென தனியாக அமைக்கப்பட்ட உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான வாயில்களுடன் கோழிப்பண்ணையிலிருந்து தனியாக இருக்கவேண்டும்.
கோழிக்கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகம் குறைந்தது ஆயிரம் அடி தொலைவு தூரத்தில் இருந்தால் தான் கோழிக் கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகத்திற்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
குஞ்சு பொரிப்பகத்தின் அளவு
முட்டை அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிக்கும் இயந்திரங்களின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு குஞ்சு பொரிப்பகத்தின் அளவு இருக்கும். தவிரவும், ஒரு வாரத்தில் அடைக்காக வைக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு வாரத்தில் பெறப்படும் குஞ்சுகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொருத்தும் குஞ்சு பொரிப்பகத்தின் அளவு மாறுபடும்.
மேலும் பிற்காலத் தேவைக்கேற்ப குஞ்சு பொரிப்பகத்தை விரிவு படுத்துவதற்குத் தேவையான இடமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
குஞ்சு பொரிப்பகத்தின் வடிவமைப்பு
குஞ்சுப் பொரிப்பகத்தில் ஒரு முனையில் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டு மற்றொரு முனையில் குஞ்சுகள் வெளியே எடுத்துச் செல்லும் வண்ணம் அமைக்கப்படவேண்டும். அதாவது எந்த ஒரு முட்டையும் அல்லது கோழிக்குஞ்சும் ஒரே வழியில் நேராக வெளியே அல்லது உள்ள செல்லுமாறு அமைக்கப்படவேண்டும்.
ஆனால், இவை பின்னோக்கி வரக்கூடாது. இதனால் குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருப்பதுடன், மனிதர்களின் நடமாட்டமும் குறைக்கப்படுகிறது.