கோழிகளைத் தாக்கும் கோலிபேசிலோஸ் நோய் பற்றி ஒரு அலசல்....
கோலிபேசிலோஸ்
நோயின் தன்மை
கோலிபேசில்லோசிஸ் நோய் கோழிகளின் ஒரு உடற்பகுதியில் அல்லது உடல் முழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தும் எஸ்கெரிக்கியா கோலை எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயினால் கோழிகளில் உற்பத்திக் குறைவு மற்றும் இறப்பும் ஏற்படுகிறது.
கோலி செப்டிசீமியா, கோழிகளின் உடலின் உள்ளேயே முட்டை உடைந்து அதனால் ஏற்படும் குடற்சவ்வு அழற்சி, இளங்குஞ்சுகளில் குடலிலுள் சில நாட்கள் இருக்கும் முட்டை மஞ்சள் கருவில் நோய்க்கிருமிகள் தொற்று, ஈ.கோலை பாக்டீரியாவால் கோழிகளின் உடலில் கட்டிகள் தோன்றுதல் போன்றவை ஈ.கோலை பாக்டீரியாவால் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களாகும். இந்த நோய் நிலைகள் அனைத்தும் சேர்ந்தது கோலி பேசில்லோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்
ஈ.கோலை பாக்டீரியா சாதாரணமாகக் வனப்பறவைகளின் குடலில் இருக்கும். எனவே இப்பறவைகளின் மூலம் இந்நோய் கோழிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பரவுகிறது.
ஈ.கோலே பாக்டீரியா பொதுவாக பயன்படுத்தப்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் கிருமி நீக்க முறைகளால் கொல்லப்பட்டுவிடும். ஆனால் உறையும் வெப்பநிலையினை இந்த பாக்டீரியா தாங்கிக்கொண்டு நீண்ட நாட்கள் குறைந்த வெப்பநிலையில் உயிரோடு இருக்கும்.
ஆழ்கூளத்தில் இருக்கும் அமோனியா வாயு இந்த பாக்டீரியாவினை செயலிழக்கச் செய்து விடும். மேலும் இந்த பாக்டீரியா 37 0 C வெப்பநிலையில் 1-2 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கோழிகளின் மூச்சுக்குழல், பெருங்குடல் பகுதி, முட்டைக்குழாய் போன்றவற்றில் ஈ.கோலை பாக்டீரியா நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
முட்டைகளின் வழியாக இந்த பாக்டீரியா பரவுவதில்லை
பூச்சிகள் இந்நோயினைப் பரப்புகின்றன. இந்நோயினைப் பரப்பும் பூச்சிகளைப் பறவைகள் அல்லது கோழிகள் உட்கொள்ளும் போது இந்நோயினால் கோழிகள் பாதிக்கப்படுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான ஈ.கோலை பாக்டீரியா கோழிப்பண்ணையின் சுற்றுப்புறச் சூழ்நிலையில் எச்சம் மூலம் பரவி நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்கும்.
குஞ்சு பொரிப்பகங்களில்ஈரப்பதம் குறைவாக இருக்கும் சூழ்நிலைகளில் அதிகப்படியாக ஈ.கோலைதாக்குதல் குஞ்சுகளுக்கு ஏற்படும். ஆனால் உடல் முழுவதும் ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படுவதற்கு சுற்றுப்புற சூழ்நிலைகளும் மற்ற நோய்க்கிருமித் தொற்றுகளும் காரணமாக இருக்கின்றன.
மைக்கோபிளாஸ்மோசிஸ், சிறு மூச்சுக்குழல் நோய், நியூகேசில் நோய் எனும் இராணிக்கெட் நோய், இரத்தக்கழிச்சல், வான்கோழிகளுக்கு ஏற்படும் பார்டொடெல்லோசிஸ் போன்ற நோய்கள் கோழிகளுக்கு கோலிபேசில்லோஸிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன.
காற்று மாசுபாடு, சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஏற்படும் அயற்சி போன்றவையும் ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக இருக்கின்றன.
குஞ்சுப் பொரிப்பகங்களில் குறைவான ஈரப்பதம் இருப்பது குஞ்சுகளுக்கு அதிகப்படியான ஈ.கோலை நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. புதிதாகப் பொரிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் ஈ.கோலை பாக்டீரியா வேகமாகக் குஞ்சுபொரிப்பகத்தில் உள்ள கோழிக்குஞ்சுகளுக்கிடையே பரவுகின்றன.
நோய் அறிகுறிகள்
பாதிக்கப்பட்ட கோழிகளில் சுவாச மண்டலம் சார்ந்த நோய் அறிகுறிகள், சோர்ந்து காணப்படுதல், பசியின்றிக் காணப்படுதல்,நகர முடியாமல் இருத்தல்
கோழிகளின் ஆசன வாய் ஈரமாகக் காணப்படுதல் மற்றும் கழிச்சல் ஏற்படுதல்
கோழிக்குஞ்சுகளில் தொப்புள் பகுதியில் ஈ.கோலே நோய்த்தொற்று ஏற்படுவதால் கோழிக்குஞ்சுகளில் அவற்றின் ஒரு வார வயதில் இறப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள் சோர்ந்து, வயிறு உப்பி, தொப்புள் பகுதி வீங்கிக் காணப்படுவதுடன், வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக அடைந்து காணப்படும்.
தலை வீங்கிக் காணப்படும் நோய் நிலையில் தலை வீங்கிக் காணப்படும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் உடலில் காணப்படும் நோய் அறிகுறிகள்
கோலி செப்டிசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளுடைய அவற்றுடைய காற்றுப்பைகளின் உட்சவ்வில் அழற்சி, கல்லீரல் சுற்றி ஒரு வெள்ளை சவ்வு போன்று படிதல், இருதயத்தைச் சுற்றி வெள்ளை சவ்வு படிதல், மேலும் நார் நிறைந்த நீர் போன்று வடிதல்
கோழிக்குஞ்சுகளின் தொப்புள் கொடி பாதிக்கப்படும் போது, அவற்றின் வயிற்றில் மஞ்சள்கரு பாதிப்புக்குள்ளாகி, அவற்றில் மஞ்சள் கரு உறிஞ்சப்படாமல் இருத்தல், நிறம், வாசனை, தன்மை போன்றவை மாறியிருத்தல்
முட்டைக் குழாய் அழற்சி ஏற்பட்டு அவற்றின் குடல் சவ்வு அழற்சி, அவற்றின் வயிற்றில் மஞ்சள் கரு அப்படியே இருத்தல், முட்டைக் குழாய் அடைப்பு ஏற்படுதல், கருமுட்டைப் பை உடைந்து போதல், விரும்பத்தகாத வாசனை ஏற்படுதல்
கோலிகிரோனுலோமா எனும் உறுப்புகளில் கட்டி ஏற்படும் நிலையில் சிறிய தானிய அளவிலான கட்டிகள் கல்லீரல், குடல் மற்றும் குடலைச் சுற்றிய சவ்வில் கட்டிகள் ஏற்படுகிறது.
காற்றுப்பை பாதிக்கப்படும் நோய் நிலையில், காற்றுப்பைகள் வீங்கி, வெள்ளையான நீர் தேங்குதல்
முழுமையாக உருவான முட்டை அல்லது அரைகுறையாக உருவான முட்டை பாதிக்கப்பட்ட கோழிகளின் வயிற்றில் தேங்கி, முட்டைக் குழாயில் தேங்கி, குடற் சவ்வில் ஒட்டியும், உள்உறுப்புகளிலும் ஒட்டிக் கொண்டு இருத்தல்
நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
நோயினை ஏற்படுத்துவதற்குக் காரணமான இதர காரணிகள், சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள், மிக சீக்கிரமாக கோழிகளின் இளம் வயதிலேயே எதிர் உயிரி மருந்துகளை உபயோகிக்க ஆரம்பிப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல்
சுகாதாரம் மற்றும் உயிர்ப்பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால் முட்டைகள் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சத்தால் அசுத்தமடைவதைத் தடுத்தல்
நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளிலிருந்து வெளியேறும் எச்சம், மற்றும் ஆழ்கூளம் போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதால், தண்ணீர் மாசுபடுதல், பண்ணை சுற்றுப்புறம் மாசுபடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
நோய்க்கிளர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமான அயற்சி, குறைந்த இடத்தில் அளவிற்கு அதிகமாக கோழிகளை வளர்த்தல் போன்றவற்றைத் தவிர்த்தல்
புரதச் சத்து, செலினீயம், வைட்டமின் ஈ போன்றவற்றைதீவனத்தில் தேவைப்படும் அளவு சேர்ப்பதால் கோலிபேசில்லோசிஸ் நோயினைக் கட்டுப்படுத்துலாம்.
தண்ணீரில் குளோரின் கலப்பதால் பாக்டீரியா கொல்லப்படுகிறது.