Asianet News TamilAsianet News Tamil

சீன - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏழரை மணிநேரம் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுச் செயலர், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பான எதிர்பார்த்ததை விட அதிகமாக ஏழரை மணிநேரம் நடந்தது கவனம் ஈர்த்துள்ளது

US Secretary of State Meets China Foreign Minister Constructive talk says america
Author
First Published Jun 19, 2023, 11:21 AM IST

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் சீனா சென்றுள்ளார். அங்கு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங்கை அவர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையானது எதிர்பார்த்தை விட அதிகமாக சுமார் ஏழரை மணி நேரம் நீடித்தது. அப்போது இரு தரப்பிலும், மோதல்களைத் தவிர்க்கும் வகையில் தகவல்தொடர்புகளைத் தொடர ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான இறுக்கமான உறவுகளை மேம்படுத்தும் வகையில், உலகின் சக்திவாய்ந்த தலைவரான சீன அதிபர் ஜி  ஜின்பிங்கையும் ஆண்டனி பிளிங்கன் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த சந்திப்பை இரு தரப்புமே அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை. 

இதனிடையே, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மேலான பதவியாக கருதப்படும் சீனாவின் உயர்மட்ட தூதரான வாங் யி-யை ஆண்டனி பிளிங்கன் இன்று சந்தித்தார். சந்திப்பிற்கு முன்னதாக இருவரும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். வர்த்தகம் முதல் தொழில்நுட்பம் வரை மற்றும் தைவான் பிரச்சினைகளில் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

ஆனால், ஆண்டனி பிளிங்கனின் பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவிலான முன்னேற்றங்களை அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை, ஆனால், மோதல்கள் முற்றுவதை தடுக்கும் வகையில், வழக்கமான தகவல் தொடர்புகளை மேம்படுத்த இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

#Breaking காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை!

அதேசமயம், ஆண்டனி பிளிங்கனின் சீன வருகைக்கு பிறகு, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் அமெரிக்கா செல்ல ஒப்புக்கொண்டுள்ளார். இதனை இரு தரப்புமே உறுதி செய்துள்ளது. முன்னதாக, குயின் கேங் உடனான ஆண்டனி பிளிங்கனின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது, தவறான கருத்து மற்றும் தவறான கணக்கீடுகளின் ஆபத்தை குறைக்க இராஜதந்திர அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என சுட்டிக்காட்டிய ஆண்டனி பிளிங்கன், அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார். அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் மோசமாக உள்ளதாக குயின் கேங் சுட்டிக்காட்டியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூதரக உறவுகள் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு இணங்கவில்லை எனவும், சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் குயின் கேங் சுட்டிக்காட்டியுள்ளார். அதேசமயம், சீனாவால் உரிமை கோரப்படும் தைவான் பிரச்சினைகளில் குயின் கேங் அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தைவானில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக கோபமடைந்த சீனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தைவான் அருகே இரண்டு முறை நேரடி துப்பாக்கிச் சூடு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசிய தலைநகர் பாலியில் சந்தித்தனர். அந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே, கரைந்து வரும் உறவில் சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios