அவதூறு அறிக்கைகள்... ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான பொதுநல வழக்கிற்கு பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டின் நீதித்துறையில் ஊழல் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியதற்காக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரும் பொதுநல வழக்கிற்கு பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வரின் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த நீதித்துறைக்கு எதிரானது என்றும் நீதிமன்றங்களை அவதூறு செய்வது போல் தெரிகின்றன என்றும் நீதிபதிகள் மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. இந்தப் பின்னணியில், இந்த வழக்கில் முதல்வர் அசோக் கெலாட்டின் பதில் தேவை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் முதல்வர் அசோக் கெலாட் பதிலளிக்க 3 வார கால அவகாசம் அளிப்பதாகவும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அப்போ ரூ.10,000 முதலீடு செய்திருத்தால் இப்ப நீங்கதான் கோடீஸ்வரன்! உதய் கொடாக் சொல்லும் கணக்கு என்ன?
வழக்கறிஞர் ஷிவ் சரண் குப்தா தாக்கல் செய்த மனுவின்படி, ஆகஸ்ட் 30 அன்று நீதித்துறையில் ஊழல் குறித்து அசோக் கெலாட் பேசியிருப்பதாகவும் அது வேண்டுமென்றே நீதித்துறையை அவதூறு செய்வதாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 215வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி இந்த வழக்கை உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் ஷிவ் சரண் குப்தா தனது மனுவில் கோரியிருக்கிறார்.
கெலாட் உயர் நீதித்துறை நிறுவனங்கள் உட்பட நீதித்துறையில் பரவலான ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அசோக் கெலாட், "இன்று நீதித்துறைக்குள் ஊழல் நடக்கிறது. மிகவும் திகிலூட்டுகிறது. நிறைய வழக்கறிஞர்கள் தீர்ப்புகளை எழுதி, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுதான் நீதிமன்றத்தில் உச்சரிக்கப்படுகிறது" என்று கூறினார்.