Asianet News TamilAsianet News Tamil

சதாப்தி ரெயிலில் இஃப்தார் சர்பிரைஸ்.. மகிழ்ச்சியில் டுவிட் போட்ட அக்தர் - பாராட்டு மழையில் ஐ.ஆர்.சி.டி.சி.

இந்திய ரெயில்களில் நவராத்திரி காலக்கட்டத்தில் இந்து மத பயணிகளுக்கு மட்டும் சிறப்பு விரத உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Man Onboard Shatabdi Express Gets Surprise Iftar
Author
India, First Published Apr 27, 2022, 11:54 AM IST

இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு எடுப்பதை அவர்களின் ஐந்தும் பெரும் கடமைகளில் ஒன்றாக வைத்து, அதனை தீவிரமாக கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாம் காலண்டரில் தற்போது ரமலான் மாத பிறை துவங்கி இருக்கிறது. இதை அடுத்து முஸ்லீம்கள் நோன்பு நோற்பதை வழக்கமாக கடைப் பிடித்து வருகின்றனர். இந்த மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த ஆண்டிற்கான ரமலான் நோன்பு ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஹவுராவில் இருந்து ராஞ்சி செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயலில் பயணித்த ஷா நவாஸ் அக்தர் எனும் பயணி, ரெயிலில் தனக்கு வழங்கப்பட்ட ரமலான் உபசரிப்பை பார்த்து ஆச்சரியம் அடைந்து போனார். இவர் பயணித்த ரெயிலில் வழக்கமான உணவுகளுக்கு பதிலாக தனக்கு இஃப்தார் வழங்கப்பட்டதை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பொதுவாக இந்திய ரெயில்களில் நவராத்திரி காலக்கட்டத்தில் இந்து மத பயணிகளுக்கு மட்டும் சிறப்பு விரத உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், ரமலான் காலக்கட்டத்தில் இதுபோன்று எந்த சேவையும் இந்திய ரெயில்வே துறையில் வழங்கப்படுவதில்லை. 

வைரல் டுவிட்:

"இஃப்தார் வழங்கியதற்கு இந்திய ரெயில்வேக்கு மிக்க நன்றி. ஹவுரா சதாப்தி ரெயிலில் ஏறியதும், தான்பாட் பகுதியில் எனக்கான சிற்றுண்டி வழங்கப்பட்டது. நான் நோன்பு இருப்பதால், எனக்கு தேநீர் மட்டும் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். எனினும், நோன்பு இருக்கிறீர்களா என கேட்டனர். நான் ஆமாம் என்றேன். பின் வேறு யாரோ ஒருத்தர் இஃப்தாருடன் வந்தார்," என ஷா நவாஸ் அக்தர் தனது டுவிட்டரில் இந்திய ரெயில்வேக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்தார். இத்துடன் தனக்கு வழங்கப்பட்ட இஃப்தார் புகைப்படத்தையும் அவர் இணைத்து இருந்தார்.

அக்தருக்கு வழங்கப்பட்ட உணவினை, ரெயிலில் உணவு வழங்கும் பிரிவில் பணியாற்றிய மேலாளர் தனது தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து கொடுத்தார் என ஐ.ஆர்.சி.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

பகிர்ந்து அளித்தல்:

"ரெயிலில் பயணம் செய்த பணியாளர்களில் சிலர் நோன்பு துறக்க ஆயத்தமாகி வந்தனர். இதே ரெயிலில் ஏறிய அக்தரும், நோன்பு இருப்பதாக தெரிவித்தார். இதை அடுத்து பணியாளர்கள் தங்களின் இஃப்தாரை அவருடன் பகிர்ந்து கொண்டனர். இது அடிப்படையான மனிதாபிமான காரியம்," என ஐ.ஆர்.சி.டி.சி. கேட்டரிங் சூப்பர்வைசர் பிரகாஷ் குமார் பெஹரா தெரிவித்தார். 

ஷா நவாஸ் அக்தர் டுவிட்டரில் வெளியிட்ட இந்த சம்பவத்தை பார்த்து, நெட்டிசன்கள் பலரும் ரெயில்வேயில் பணியாற்றி வந்த ஊழியர்களை வெருவாக பாராட்டி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.  சார்பில் நவராத்திரி பண்டிகை காலக்கட்டத்தில், சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் உணவு வகைகள் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படாமல் சமைக்கப்படும். மேலும் உணவில் கல் உப்பு மட்டுமே பயன்படுத்தப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios