Asianet News TamilAsianet News Tamil

மீட்பு பணிகளின் போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு.. வைரலாகும் பரபர வீடியோ..!

நிலை தடுமாறிய நபர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தார். அதிக உயரத்தில் இருந்து மலையின் மேல் விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Man falls to death from IAF chopper during rescue operation, horrifying video goes viral
Author
India, First Published Apr 12, 2022, 11:16 AM IST

ஜார்கண்ட் கேபிள்கார் விபத்து களத்தில் இருந்து இந்திய வான்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மீட்பு பணிகளின் போது ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்ட கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே ஏற்றப்பட்டு விட்டார். எனினும், ஹெலிகாப்டரின் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வீடியோ காட்சிகளின் படி, கேபிள் காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் மலை பகுதியில் பாறைகளின் மேல் பறந்து கொண்டிருந்த இந்திய வான்படை ஹெலிகாப்டரில் ஏற முயற்சிக்கிறார். எனினும், உள்ளே செல்ல முயற்சிக்கும் போது நிலை தடுமாறிய நபர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்தார். அதிக உயரத்தில் இருந்து மலையின் மேல் விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பகுதி வனப் பகுதியில் அமைந்து இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. 

உயிரிழப்பு:

ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தவரை சேர்த்து கேபிள் கார் விபத்து சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் டியோகர் மாவட்டத்தில் உள்ள பைத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள கேபிள் கார் நடுவழியில் ஒன்றோடு ஒன்று உரசியதில் இந்த விபத்து ஏற்பட்டது. 

இதன் காரணமாக கேபிள் காரில் பயணம் செய்த அனைவரும் நடுவழியில் சிக்கித் தவித்தனர். இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் இந்திய வான்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். 

மீட்பு:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 32 பேர் கேபிள் கார்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் கேபிள் காரிலேயே சிக்கித் தவிக்கின்றனர்."ஹெலிகாப்டர்களின் உதவியுடன் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேர் இன்னமும் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர். கேபிள் கார்கள் வெவ்வேறு தொலைவுகளில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக 1500 அடி உயரத்தில் கேபிள் கார் தொங்கி கொண்டு இருக்கிறது. நேற்று சூரிய மறைவுக்கு பின் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது," என ஏ.டி.ஜி.பி. ஆர்.கே. மாலிக் தெரிவித்தார். 

நடவடிக்கை:

"விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது," ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சரென் தெரிவித்தார். "உலக புகழ் பெற்ற வழிபாட்டு தளமான டியோகர் மலைப்பகுதியில் கட்டப்பட்டு இருக்கும் கேபிள்கார் விபத்தில் சிக்கியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விபத்தில் காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற பாபா பைத்யநாத்திடம் வேண்டிக் கொள்கிறேன்," என ஆளுநர் ரமேஷ் பையஸ் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios