டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மற்றும் பண மோசடி வழக்கு தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு வரும் 9 ஆம் தேதி (நாளை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவிதாவுக்கு சம்மனில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவிதாவுக்கு வயது 44. இவர் பாரத் ராஷ்டிர சமிதி சார்பில் தெலுங்கானா மாநிலத்தின் எம்எல்சி-ஆக இருக்கிறார்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடியில் தெற்கில் இருந்து மையப் புள்ளியாக செயல்பட்டதாக கூறப்படும் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் ராம்சந்திர பிள்ளையை கடந்த திங்கள்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கவிதாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரையும் ஒரு சேர நாளை அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. கவிதாவையும் இணைத்துக் கூறப்படும் மதுபானக் கொள்கை ஊழல் மற்றும் பண மோசடியில் தெற்கில் இருந்து ஒரு மையப்புள்ளியாக அருண் ராம்சந்திர பிள்ளை செயல்பட்டதாக முன்பு அமலாக்கத்துறை குறிப்பிட்டு இருந்தது.
தென் மாநிலங்களில் இருந்து சரத் ரெட்டி (அரவிந்தோ பார்மாவின் விளம்பரதாரர்), மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி (ஒங்கோல் மக்களவைத் தொகுதியிலிருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி), கவிதா மற்றும் பலரின் பெயரை அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக்கோரி டெல்லி, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கவிதா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை, அமலாக்கத்துறை முன்பு ஆஜராகுமாறு இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவிதாவிடம் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
TRS Kavitha: டெல்லி மதுபார் ஊழல் வழக்கு: தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு சிபிஐ நோட்டீஸ்
2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி அரசின் மதுபானக் கடைகள் ஏலத்தில், லஞ்சம் பெற்றுக் கொண்டு சில டீலர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக மறுத்துள்ளது.
இந்தக் கொள்கையை டெல்லி அரசு பின்னர் ரத்து செய்தது. இதையடுத்து, டெல்லி லெப்டினன்ட் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
