Asianet News TamilAsianet News Tamil

100 ஊழியர்களுக்கு கார் பரிசு - சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவனம் அசத்தல்..! எப்படி கொடுத்தாங்க தெரியுமா?

100 சிறந்த ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கிய முதல் இந்திய ஐ.டி. நிறுவனமாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். 

Chennai based IT firm gifts cars to 100 staff for contribution towards company's growth
Author
India, First Published Apr 12, 2022, 10:40 AM IST

சென்னையை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான ஐடியாஸ்2ஐடி (Ideas2IT) தனது ஊழியர்கள் 100 பேருக்கு புத்தம் புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி அசத்தி இருக்கிறது. நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை தொடர்ந்து வழங்கி வருவதை அடுத்து ஐடியாஸ்2ஐடி நிறுவனம் மாருதி சுசுகி கார்களை பரிசாக வழங்கி அசத்தி இருக்கிறது.

ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான காயத்ரி விவேகானந்தன் மாபெரும் பரிசு வழங்கும் விழாவில் ஐடியாஸ்2ஐடி நிறுவனர் மற்றும் தலைவர் முரளி விவேகானந்தன் முன்னிலையில் 100 ஊழியர்களுக்கும் மாருதி சுசுகி கார்களை பரிசாக வழங்கினார். 

பரிசு மதிப்பு:

நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருவோருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் பணி நிலையை கருத்தில் கொள்ளாமல், நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்பவர்களை ஐடியாஸ்2ஐடி தேர்வு செய்து கார்களை பரிசாக வழங்கி இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் முதல் பலேனோ வரையிலான கார்கள் ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. பரிசாக வழங்கப்பட்டு உள்ள கார்களால் நிறுவனத்திற்கு ரூ. 15 கோடி வரை செலவாகி இருக்கிறது. நிறுவனர்களிடம் இருந்து கார் சாவிக்களை பரிசாக பெற்ற நாளை ஊழியர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். 

"100 சிறந்த ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கிய முதல் இந்திய ஐ.டி. நிறுவனமாக இருப்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிப்பாதையில் பயணிக்க செய்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். கார்களை வழங்கி ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள நாங்கள் திட்டமிடவில்லை" 

"ஐ.டி. நிறுவனங்கள் உண்மையான திறமை கொண்ட ஊழியர்களை கண்டறிய திணறி வருகின்றன. நாங்கள் அவர்களின் பங்களிப்பை கொண்டாடி, அவர்களின் வெற்றி கொண்டாட நினைக்கிறோம். ஊழியர்களை இதனை தங்கள் நிறுவனமாக கருதி நீண்ட காலம் இங்கேயே பணியாற்றி இருக்கின்றனர். நாங்கள் எங்களின் சொத்தை எங்களின் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களை எங்களின் கூட்டாளிகள் போன்று நடத்துகிறோம்," என முரளி விவேகானந்தன் தெரிவித்தார். 

தொடக்கம் தான்:

"எங்களின் ஊழியர்களால் கிடைத்திருக்கும் சீரான வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஐடியாஸ்2ஐடி நிறுவனம் சார்பில் பிரத்யேகமான வெல்த்-ஷேரிங் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறோம். அதன்படி ஊழியர்களுக்கு கார் வழங்குவது முதல் படி மட்டும் தான். இதேபோன்று பல்வேறு இதர பரிசுகளை எதிர்காலத்தில் வழங்க ஐடியாஸ்2ஐடி முடிவு செய்து இருக்கிறது," என விவேகானந்தன் தெரிவித்தார். 

"சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஹை-எண்ட் பிராடக்ட் என்ஜினியரிங் நிறுவனமாக ஐடியாஸ்2ஐடி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணைப்பை வழங்கி வரும் 100 ஊழியர்களுக்கு 100 கார்களை பரிசாக வழங்கி இருக்கிறது." என ஐடியாஸ்2ஐடி வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மென்பொருள் திட்டங்கள்:

ஐடியாஸ்2ஐடி நிறுவனம் உலகளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக விளங்கி வரும் பேஸ்புக், புளூம்பர்க், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், மோட்டோரோலா, ரோச்சி, மெட்ரானிக் மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுக்கு தலைசிறந்த மென்பொருள் திட்டங்களை வழங்கி வருகிறது. 

2009 ஆம் ஆண்டு ஆறு பொறியாளர்களுடன் தொடங்கப்பட்ட ஐடியாஸ்2ஐடி கன்சல்டிங் நிறுவனமாக துவங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பாளர்கள் அமெரிக்கா, மெக்சிக்கோ மற்றும் இந்தியாவில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios