Asianet News TamilAsianet News Tamil

திருப்பதியில் நேற்று ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி.. 76 ஆயிரம் பேர் சாமி தரிசனம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் பக்தர்கள் ரூ.5.43 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 76 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
 

5 crore donation in Tirupati yesterday - 76 thousand people Swami Darshan
Author
India, First Published May 26, 2022, 12:12 PM IST

பல மாநிலங்களில் பொதுத்தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஏழுமலையான் கோயிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வு அளிக்கபட்டுள்ள நிலையில், வழக்கம் போல் பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கி விட்டனர்.  மேலும், வரும் ஆகஸ்ட மாதம் வரை திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 30 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. 

தற்போது தினமும் சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல், தினமும் சர்வ தரிசன டோக்கன்களும், மலையேறி வருபவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு வருவதால் பக்தர்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு வரும் ஜூன், மற்றும் ஜூலை மாதத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களுக்காக திருமலையில் தங்கும் அறைக்கான முன்பதிவு செய்துகொள்ள ஆன்லைன் வசதியை தேவஸ்தானம் இணைய தளத்தில் வெளியிட்டது.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடி உண்டியல் வருமானம் இருந்து வரும் நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியே 43 லட்சம் வந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் சுவாமியை 76,148 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 39,208 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி இன்று காலை திருமலையில் 29 அறைகளில் பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர். இதனால் சுவாமியை தரிசிக்க 7 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் ஜூன் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வெளியிடுகிறது.

மேலும் படிக்க: எல்லா மசூதிகளையும் தோண்டுங்க... தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு சவால்..!

Follow Us:
Download App:
  • android
  • ios