நிர்மலா சீதாராமனின் முதல் இடைக்கால பட்ஜெட்டில் எப்படி இருக்கும்? இப்பவே தெரிஞ்சு வச்சுக்கோங்க!
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் பட்ஜெட் பற்றி பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதிலை விளக்கமாகத் தெரிந்துவைத்துக்கொள்ளலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இது தேர்தல் ஆண்டு என்பதால், இது ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். இது புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அரசாங்க செலவினங்களை உள்ளடக்கும் தற்காலிக நிதித் திட்டமாகும்.
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முழுமையான வரவுசெலவுத் திட்டம் முழு நிதியாண்டிற்கும் நாட்டின் பொருளாதாரப் போக்கை வழிநடத்தும் திட்டமாக இருக்கும். இடைக்கால பட்ஜெட் குறுகிய காலத்திற்கான நிதி விவரங்களை முன்வைக்கும்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் பட்ஜெட் பற்றி பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதிலை விளக்கமாகத் தெரிந்துவைத்துக்கொள்ளலாம்.
மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் இந்த முறை தொடங்கப்பட்டது. அதற்கு முன் பிப்ரவரி கடைசி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.
2024 இடைக்கால பட்ஜெட்டில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இடைக்கால பட்ஜெட் தேர்தல் ஆண்டில் சமர்ப்பிக்கப்படுவதால், அது பெரும்பாலும் குறுகிய காலத்திற்கான கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்தப் போக்கை மாற்றும் வகையில் பொருளாதார வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய அரசியல் செய்திகள், நிதி தேவைகள் போன்றவற்றில் தொடர்ந்து சமநிலையை ஏற்படுத்துவதில் அரசு ஆர்வமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சிட்டி குழுமத்தின் பொருளாதார வல்லுனர் சமிரன் சக்ரவர்த்தி சொல்கிறார்.
எதிர்க்கட்சிகளிடம் இருந்து வலுவான நெருக்கடி ஏதும் இல்லாத சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத்தேர்தலுக்குப் பின் ஆட்சியைத் தக்கவைக்கும் நம்பிக்கையுடன் உள்ளது. இதனால், ஜனரஞ்சக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தம் குறைவாகவே உள்ளது என்று ப்ளூம்பெர்க் பொருளாதார வல்லுநர் அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.
12 லட்சம் சம்பாதிச்சாலும் வருமான வரியே கட்ட வேண்டாம்! இந்த ஐடியாவைத் தெரிஞ்சுக்கோங்க!
கடந்த முறை இடைக்கால பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டது?
இந்த ஆண்டைப் போலவே, கடந்த 2019ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அருண் ஜேட்லியின் உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு நிதியமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிப்ரவரி 1, 2019 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் பியூஷ் கோயல் சில முக்கியமான மாற்றங்களை அறிவித்தார். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம், மீன்வளத்துறை உருவாக்கம், ராஷ்டிரிய கோகுல் மிஷன், ரயில்வேக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு, கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலைகள் அமைப்பதற்கு ரூ.19,000 கோடி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள் இருந்தன. ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் அறிவிப்பையும் பியூஷ் கோயல் தனது இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்டார்.
பொருளாதார ஆய்வறிக்கையில் என்ன இருக்கும்?
பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் தாக்கல் நடைமுறைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51 இல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த முக்கிய நிதி ஆவணம் 1964 வரை மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்தே சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அது தனியே பிரிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே வெளியிடப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு, நிதியமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்காது. அதற்கு பதிலாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரப் பயணம் குறித்த அறிக்கையை 'இந்தியப் பொருளாதாரம்: ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்ட உள்ளது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: அமித் ஷா அறிவிப்பு