அமெரிக்காவில் கோர விபத்து - டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி ; 31 பேர் படுகாயம்

First Published Oct 26, 2016, 1:54 AM IST
Highlights


அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதியதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்கர்கள் வார விடுமுறை நாட்களை சுற்றுலா சென்று கேளிக்கை, கொண்டாட்டங்களுடன் கழிப்பது வழக்கம். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த 40க்கு மேற்பட்டோர் ‘யு.எஸ்.ஏ. ஹாலிடே பஸ்’ என்ற நிறுவனத்தின் ஒரு சுற்றுலா பஸ்சை முன் பதிவு செய்தனர்.

அந்த பஸ் மூலம், பால்ம் ஸ்பிரிங்ஸ் நகர் அருகே தெர்மல் என்னும் இடத்தில் உள்ள ‘ரெட் எர்த் கேசினோ’ என்ற புகழ்பெற்ற சூதாட்ட விடுதிக்கு அந்த பஸ்சில் சென்றனர். அன்றைய நாள் முழுவதும் அங்கேயே பொழுதை கழித்த அவர்கள், நள்ளிரவு லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டனர்.

பஸ்சை அதன் உரிமையாளர்களில் ஒருவரே ஓட்டினார். அவர்களது பஸ் மேற்கு மாகாண இணைப்புச் சாலை 10ன் வழியாக சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 5.15 மணியளவில் பால்ம் ஸ்பிரிங்ஸ் நகர் அருகே அந்த பஸ் சென்றபோது, முன்னால் கன்டெய்னர் இணைக்கப்பட்ட ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா பஸ், முன்னால் சென்ற டிராக்டரின் கன்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் கன்டெய்னருக்குள் 15 அடி தூரம் வரை புகுந்ததால் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 31 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்தபோது பயணிகளில் பெரும்பாலானோர் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் பலர் விபத்து நடந்ததே தெரியாத நிலையில் உடல் நசுங்கி இறந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு குழுவினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

click me!