இந்திய ராணுவத்தின் "சர்ஜிக்‍கல் ஸ்ட்ரைக்" உண்மையே : பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி ஓபன் டாக்

First Published Oct 6, 2016, 11:34 PM IST
Highlights


ஆக்‍கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்‍குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் மறுத்துவரும் நிலையில், Surgical Strikes தாக்குதல் நடைபெற்றது உண்மைதான் என்பதை அந்நாட்டு காவல்துறை அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார். மேலும், பயங்கரவாதிகள் இந்தியாவுக்‍குள் ஊடுருவ பாகிஸ்தான் உதவியாக இருக்‍கிறது என்ற பரபரப்பு தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார். 

உரி தாக்‍குதலைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29-ம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்‍குள் புகுந்த இந்திய ராணுவ வீரர்கள், தீவிரவாத முகாம்களை குறிவைத்து "Surgical Strikes" என்ற அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்‍கப்பட்டன. ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  

இத்தாக்‍குதலை மறுத்த பாகிஸ்தான், எல்லையில் அத்துமீறி துப்பாக்‍கிச்சூடு மட்டுமே நடைபெற்றதாகத் தெரிவித்தது. அதுமட்டுமின்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நவாஸ் செரீஃப், தாக்‍குதலில் 2 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்‍கு பேட்டியளித்த பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் குலாம் அக்‍பர், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்‍குதல் நடத்தியது உண்மைதான் என தெரிவித்துள்ளார். இத்தாக்‍குதலில் 12 தீவிரவாதிகளும், 5 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் சம்பந்தப்பட்டவர்களால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்திய எல்லைக்‍ கட்டுப்பாட்டு கோட்டு வழியாக, தீவிரவாதிகள் ஊடுருவவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவி வருவதை குலாம் அக்‍பர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்‍குவித்து வருவதுடன், தீவிரவாதிகளுக்‍கு அடைக்‍கலம் அளிப்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது. 

click me!