ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் - பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

First Published Oct 8, 2016, 8:15 AM IST
Highlights


ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ கட்டரெஸ் தேர்வு செய்ய பாதுகாப்பு கவுன்சில் முழுமனதாக ஒப்புதல் அளித்து, பரிந்துரை செய்துள்ளது.

இதையடுத்து, 193 உறுப்பினர் கொண்ட பொதுச்சபையில் இவரின் நியமனம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும். புதிய பொதுச் செயலாளராக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அன்டோனியோ அடுத்த 5 ஆண்டுகள், அதாவது 2022-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.

தேர்வு

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஐ.நா.வின் தற்போது பொதுச்செயலாளர் பான் கி மூன் பதவிக்காலம் முடிவதையடுத்து, புதிய பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டரெஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. 67-வயதான கட்டாரெஸை பொதுச் செயலாளராக நியமிக்க 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால், 9-வது பொதுச்செயலாளராக கட்டாரெஸ் வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

ஒப்புதல்

இதையடுத்து, 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் கட்டாரெஸ் பெயர் குறித்து இறுதி ஒப்புதல் பெறப்படும். பொதுவாக, பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துவிட்டாலே அவரைத்தான் பொதுச்செயலாளராக பொதுச்சபையும் தேர்வு செய்யும் என்பது இயல்பாகும்.

சிறந்தவர்

இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விடாலி சுர்கின் கூறுகையில், “ ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டவரின் பெயரை பாதுகாப்பு கவுன்சில் ஆலோசித்தது. அதில் அடுத்த பொதுச்செயலாளராக அன்டோனியோ கட்டாரெஸை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஐ.நா. சபையை வழிநடத்திச் செல்ல கட்டாரெசுக்கு சிறந்த பண்புகள், திறமைகள் உள்ளன.

மிகச்சிறந்த அரசியல்வாதி கட்டாரெஸ். ஒவ்வொருவருடன் இனிமையாக பழகுவார், அனைவரின் பேச்சையும் கவனமாக கேட்பார். என்னைப்பொருத்த கட்டாரெஸ் இந்தபதவிக்கு சிறந்த நபர்'' எனத் தெரிவித்தார்.

பாராட்டு

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள பொதுச்செயலாளர் கட்டாரெசுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஐ.நா.வுக்கான நிரந்த தூதர் சயத் அக்பரூதீன் டுவிட்டரில் கூறுகையில், “ வாழ்த்துக்கள், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக வர உள்ள கட்டாரெசை இந்தியா வரவேற்கிறது'' எனத் தெரிவித்தார்.

யார் இந்த கட்டாரெஸ்.?

போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்தவர் அன்டோனியோ கட்டாரெஸ். பள்ளிக்கல்வியில் நாட்டின் சிறந்த மாணவருக்கான விருதை வென்ற கட்டாரெஸ், இயற்பியல் மற்றும் மின்னனுவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின், கடந்த 1974-ல் அந்நாட்டின் சோசலிஸ்ட்  கட்சியில் இணைந்தார். 1995-2002 ம்ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். அதன்பின் 2005 முதல் 2015 ம் ஆண்டு வரை ஐ.நா.வின் அகதிகளுக்கான ஆணையராக பதவி வகித்தார். 
பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருநாட்டின் பிரதமராக இருந்தவர் வருவது இது தான் முதல்முறையாகும்.

சவால்கள்...

புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ள 63-வயது அன்டோனியோ கட்டாரெசுக்கு எந்தவிதமான தேன்நிலவுக்காலமும் இருக்கப்போவதில்லை. இப்போதுள்ள நிலையில், ஐ.நா. முன், அதிகரித்து வரும் சர்வதேச தீவிரவாதம் பிரச்சினை, நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள், கடுமையான சிரியா போர், அகதிகள் சிக்கல், மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பனிப்போர் ஆகியவை தீர்க்கப்பட சவால்களாக   முன் இருக்கின்றன.

click me!