ஐநா மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும் என்று அஜ்மீர் தர்கா தலைவர் ஹஸ்ரத் திவான் சையத் ஜைனுல் அபேதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இடையே பயங்கர போர் நடந்து வருகிறது. இதுகுறித்து அஜ்மீர் தர்காவின் தலைவர் ஹஸ்ரத் திவான் சையத் ஜைனுல் அபேதீன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''அப்பாவி மக்களின் உயிரிழப்பு நியாயமற்றது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது இஸ்லாம் மற்றும் யூத மதம் ஆகிய இரண்டின் போதனைகளுக்கும் எதிரானது.
அந்தந்த மதம் மற்றும் மனித நேயத்திற்காக இந்த ரத்தக்களரியை நிறுத்துமாறு இரு தரப்பையும் கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மதமும் வன்முறையை எந்த வடிவத்திலும் வெறுக்கிறது. அப்பாவி உயிர்களை இழப்பது இஸ்லாத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
அப்பாவி உயிர்களைப் பாதுகாக்க இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும். இது போர்க்காலம் அல்ல. அமைதியான பேச்சுதான் ஒரே வழி. யார் வென்றார்கள் அல்லது தோற்றார்கள் என்பது முக்கியம் அல்ல. மனிதநேயம் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக ஒருவருக்கொருவர் உரிமைகள் மற்றும் எல்லைகளை மதிப்பதுதான் முக்கியம்.
முஸ்லீம்களாக இருக்கும்போது, முஸ்லிம் உயிர்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டும், மனித வாழ்க்கை அல்லாவுக்கு மிகவும் பிடித்தது மற்றும் கொலைகள் செய்வது அல்லாவின் தயவை நமக்கு வழங்காது.
நான் ஒரு முஸ்லீம் என்ற முறையில் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமையுடன் நிற்கிறேன். ஆனால் துப்பாக்கியை கையில் எடுத்து அப்பாவி மக்களை கொல்பவர்களுடன் அல்ல. சமூகம் உடனடியாக தலையிட்டு நிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.