காசாவில் 50,000 கர்ப்பிணிகளுக்கு குடிநீர் இல்லை; அரபு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம்!!

By Dhanalakshmi G  |  First Published Oct 13, 2023, 9:43 AM IST

காசாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. 


காசாவில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு குடிநீர் கூட இல்லை என்று ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் 34 சுகாதார நிலையங்கள் இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டன. 11 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

முன்னதாக ஹமாஸ் தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், காசாவின் பொதுமக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இஸ்ரேலியத் தலைமையைக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே இஸ்ரேல் வந்திருக்கும் ஆண்டனி பிளிங்கன் இன்று அரபு நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். 

Tap to resize

Latest Videos

ஆஸ்திரேலியா சென்ற Scoot விமானம்.. நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் - சட்டென செயல்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள்!

அதே நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானத் தளத்தில் அமெரிக்க ராணுவ விமானங்கள் வருவது தொடர்பான வதந்திகளை ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதற்காக அல்-தஃப்ராவுக்கு விமானம் வந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என ஐக்கிய அரபு அமீரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த விமானம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் வருகைக்கும் பிராந்தியத்தில் தற்போதைய நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

இஸ்ரேல் சென்று இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உடனடியாக நேற்று பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இருந்தார். அப்போது, ''நாங்கள் இங்கு உங்களுக்கு துணையாக இருக்கிறோம், எங்கும் சென்றுவிடவில்லை'' என்று ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று ஜோர்டான் மன்னரையும், பின்னர் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள்!விமானம் மூலம் 212 பேர் மீட்பு-ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்

காசாவுக்கு அளித்து வந்த அனைத்து அடிப்படை வசதிகளையும் தண்ணீர், மின்சாரம், உணவு என அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடை செய்துள்ளது. ஹமாஸ் பிடித்து வைத்து இருக்கும் இஸ்ரேல் மக்களை விடுவித்தால் மட்டுமே, மீண்டும் இந்த சேவைகள் வழங்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

கடந்த புதன்கிழமை யூத சமூகத்தினர் இடையே பேசி இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானுக்குக்கும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். ''இஸ்ரேலில் அமெரிக்க போர் கப்பல்கள், போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருப்பது ஈரானுக்கு விடுக்கும் எச்சரிக்கை. மிகவும் தெளிவாக நாங்கள் கூறுகிறோம், ஈரான் கவனமாக இருக்க வேண்டும்'' என்று எச்சரித்து இருந்தார். தற்போது வரைக்கும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கும் இஸ்ரேல், காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. தரை வழி தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சிரியாவில் உள்ள ஈரான் நாட்டின் அசையா சொத்துக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.  இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மூடப்பட்டன. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான் நாட்டுச் சொத்துக்களை அமெரிக்கா முடக்கும் என்று கூறப்படுகிறது. 

click me!