எடப்பாடி அரசுக்கு முற்றும் நெருக்கடி….எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் ? டெல்லிக்கு ஆளுநர் அவசர பயணம்… முக்கிய முடிவு !!

By Selvanayagam PFirst Published Oct 23, 2018, 11:37 AM IST
Highlights

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் நாளை அல்லது நாளை மறுநாள் தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பு நிலவி வரும்  நிலையில், இன்று ஆளுநர் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நெருக்கடியான இந்த தருணத்தில் ஆளுநர் அவசரமாக டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறப்படுறது. இதையடுத்து எடப்பாடி தரப்பு அரண்டு கிடப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சபாநாயகர் நடவடிக்கையில் தலையிட முடியாது என நீதிபதி இந்திரா பானர்ஜியும், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர்.

இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கியதால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் உடனடியாக அவர்கள் ஃபுளோர் டெஸ்ட் வைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் இபிஎஸ் அரசு நிச்சயமாக தோற்றுவிடும் என கூறப்படுகிறது.

இதே போன்று அவர்களுக்கு எதிராக  வந்தாலும் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டி வரும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் எடப்பாடி அரசு உள்ளது. இந்த நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அவசரமாகடெல்லி செல்கிறார்.

அங்கு அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க உள்ளார். அப்போது ஊசலாட்டத்தில் இருக்கும் தமிழக அரசை அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 நாள் அங்கு முகாமிடும் ஆளுநர் தமிழக அரசு தொடர்பாக முடிவு செய்வார் என்றும், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து மத்திய அரசு முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசுக்கு இது பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.

click me!