அம்பயர்களின் தவறான முடிவுகள்.. தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் அதிருப்தி.. வீடியோ

Jun 7, 2019, 2:48 PM IST

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸின்போது, கள நடுவர்கள் அடிக்கடி தவறாக அவுட் கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் சற்று தீவிரமாக அப்பீல் செய்தாலே அம்பயர்கள் அவுட் கொடுத்தனர். 

கெய்லுக்கு ஒரு தவறான எல்பிடபிள்யூ கொடுத்தார் அம்பயர். கெய்ல் டி.ஆர்.எஸ் எடுத்ததால், ரிவியூவில் அது அவுட்டில்லை என்பது தெரிந்ததும் களத்தில் நீடித்தார். பின்னர் கெய்ல் அவுட்டான பந்துக்கு முந்தைய பந்து நோ பால். அதற்கு சரியாக நோ பால் கொடுத்திருந்தால் கெய்ல் அவுட்டான பந்து ஃப்ரீ ஹிட்டாக இருந்திருக்கும். ஆனால் அம்பயர் தவறுதலாக நோ பால் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஹோல்டருக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது. அவரும் ரிவியூவால் பிழைத்தார். 

அம்பயர்களின் தவறான முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அதிருப்தியடைய செய்தது. தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரிடம் அம்பயர்களின் தவறான முடிவுகள், கெய்லின் விக்கெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹோல்டர், அதிருதியை வெளிப்படுத்தினார். எல்லாமே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்களுக்கு எல்லாமே துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

ஆனால் பலமுறை தவறான தீர்ப்புகளை வழங்கிய அம்பயர்கள் மீது, பாதிக்கப்பட்ட அணியின் கேப்டனான ஹோல்டர் கொஞ்சம் கூட கோபப்படவில்லை.