
சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த உதயா, சரண்யா தம்பதிக்கு அஸ்வதி என்ற 8 வயது பெண் குழந்தை இருந்துள்ளார். உதயா, சரண்யா இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் நேற்றைய தினம் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளனர். வீட்டில் சிறுமி அஸ்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
UPSC Exam: நெல்லையில் பீடி சுற்றும் கூலி தொழிலாளியின் மகன் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை
வேலை முடிந்து தம்பதியர் இருவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிறுமி அஸ்வதி ஜன்னலில் மறைவிற்காக கட்டப்பட்டிருந்த துணியில் கழுத்து இறுகி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் சிறுமியை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி விளையாட்டாக துணியை கழுத்தில் சுற்றிய நிலையில், அது குழந்தையின் கழுத்து பகுதியை இறுக்கி உயிரிழக்க நேரிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.