Velmurugan s | Published: Apr 4, 2025, 3:00 PM IST
ஏழை எளிய இஸ்லாமியர்களின் நலன் காப்பதற்காக வக்பு சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் வக்பு சட்டம் என்பது இஸ்லாமியருக்கு எதிரான சட்டம் எனக் கூறி சட்டத்தை அமல்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அதனை மீறி சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வக்பு சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து,அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழக வெற்றிக்கழகம் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.