சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!

May 21, 2024, 11:36 PM IST

பெலிக்ஸ் ஜெரால்டின் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது (பெண்) காவலர்களை தரக்குறைவாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது முசிறி டிஎஸ்பி எம்.ஏ.யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் திரு.பெலிக்சை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். 

மேலும் சவுக்குசங்கரின் அந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த redpix ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர்  
வீரமணி தலைமையிலான காவல்துறையினர் டெல்லியில் 10ம் தேதி இரவு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். 

தொடர்ந்து அவரை 13ம் தேதி  திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர் திருச்சி கூடுதல் மகிளா  நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு அஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து 27.5.24 வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும் நீதிபதி கைதான பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மீண்டும் இன்று மாலை 3 மணி அளவில் அவரை நேரில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.
ஒரு நாள் விசாரணை முடிந்த பின்னர் இன்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியிடம் காவல்துறையில் விசாரணையில் இருந்த பொழுது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே 27ம் தேதி வரை விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலின்படி அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.