மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!

Jun 16, 2024, 8:10 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், பிற்பகல் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. மாலை 3 மணி அளவில் திடீரென கனமழை பெய்யத் துவங்கியது.  

மேலும் இந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பரளியார் சோதனை சாவடி அருகே ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

இந்த தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ராட்சத மரத்தை துண்டுகளாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் மரக்கிளைகள் விழுந்ததால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான போக்குவரத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. 

அதே நேரம் சாலையில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உதகைக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.