Jul 2, 2024, 4:26 PM IST
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அத்துறையில் ஏற்படும் இழப்பீட்டை தவிர்க்கும் முயற்சியாக டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை டீசலை விட குறைாவன விலையில் கிடைப்பதாகவும், நல்ல மைலேஜ் கிடைப்பதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் சென்னை அடையாறு போக்குவரத்து பணிமனையில் இருந்து பிராட்வே முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் 109P என்ற குளிர்சாதனப் பேருந்து வழக்கம் போல் பிராட்வேயில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிஎன்ஜி பேருந்துகளில் ஒன்று என கூறப்படுகிறது.
இதனிடையே பேருந்து அடையாறு எல்.பி. சாலை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இருந்து திடீரென புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகள் அனைவரையும் எச்சரிக்கை செய்து கீழே இறங்கச் செய்தார். அனைவரும் கீழே இறங்கிய நிலையில், பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.