விஜயகாந்தின் கோபத்தில் நியாயம் இருக்கும்; சுயநலம் இருக்காது - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Dec 29, 2023, 11:52 AM IST

சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு உடனடியாக சென்னை வந்தார். பின்னர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களான பிரேமலாதா, மகன்கள் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “கேப்டன் என்பது அவருக்கு மிகவும் பொருத்தமான பெயர். நட்புக்கு இலக்கணம் என்றால் விஜயகாந்த் தான். விஜயகாந்த்-ன் அன்புக்கு எல்லோரும் அடிமையாகிவிடுவோம். விஜயகாந்த் ஒரு விசயத்திற்காக கோபப்படுகிறார் என்றால் அவரது கோபத்திற்கு பின்னால் ஒரு நியாயம் இருக்குமே தவிற சுயநலம் இருக்காது.

விஜயகாந்துக்கு வீசப்பட்ட 71 பந்துகளில் (71 வயது) எத்தனையோ பவுண்டரிகள், சிக்சர்கள், நூற்றுக்கணக்கான ரன்களை குவித்து மக்களை மகிழ்வித்துவிட்டு தற்போது விக்கெட்டை இழந்து உலகம் எனும் பீல்டை விட்டு விடைபெற்றுவிட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த் என நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.