Feb 2, 2024, 5:07 PM IST
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பழமை வாய்ந்த பெருங்கருணை நாயகிஉடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றது. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலம், முதலை உண்ட பாலகனை தரச் சொல்லு காலனையே என சுவாமிக்கு உத்தரவிட்டார். தேவாரம் பாடி பாலகனை மீட்டெழவைத்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலம். இத்தகைய பெருமை வாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மஹாகும்பாபிஷேகம் விழா இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகம் விழா கடந்த 24ஆம் தேதி விநாயகர் வேள்வியோடு துவங்கியது. 8 கால யாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று ஆறாம் கால வேள்வி பூஜையும், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத ஆகமங்களை ஓதினர்.
இன்று எட்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவினாசி அப்பர், பெருங் கருணாம்பிகை அம்மன், சுப்பிரமணிய பெருமான் ஆகிய மூலவர் சன்னதி விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் காரணமாக அவிநாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.