Oct 28, 2023, 11:35 AM IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ் வருடத்திற்கான பிரகதீஷ்வரருக்கு அன்னாபிஷேகம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை பச்சை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்யபட்டு வருகிறது. லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனை அடுத்து இன்று மாலையில் பல்வேறு காய்கறிகள் மற்றும் மலர்களால். அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராரதனை நடைபெறும். இதனை ஒட்டி லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். மீதமுள்ள சாதம் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய ஜீவராசிகளுக்கு உணவாக வழங்கப்பட உள்ளது. அன்னாபிஷேக விழாவில் பல்வேறு மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளனர்.