Mar 24, 2024, 7:00 PM IST
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டு தலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவிற்கு கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கியது விழாவின் முக்கிய விழாவான பாடைகட்டி காவடி விழா இன்று நடைபெற்று வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நோய் குணமடைய வேண்டி மகா மாரியம்மனை வேண்டிக் கொள்வர். நோயிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல பாடையில் படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்யப்படும்.
பின்னர் அந்த பாடை காவடியை அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றுப் பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக் கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மகா மாரியம்மன் கோவிலை மும்முறை சுற்றி வலம் வருவார்கள். நோயுற்றவர்களுக்கு மறு உயிர் வழங்கிய அம்மனுக்கு பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வே பாடைக்காவடி திருவிழா என அழைக்கப்படுகிறது. இன்று நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவையொட்டி பக்தர்கள் பாடைக்காவடிகள், பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இதனால் மகாமாரியம்மன் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவையொட்டி திருவாரூர் மாவட்ட காவல் கண்கனிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பாட்ட போலீசார். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.